பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



56 நல்வழிச் சிறுகதைகள்

முருகன் நோயுற்றுப் படுத்திருப்பதாக அந்த ஆள் வந்து சொன்னார். மருத்துவரிடம் காண்பித்தானா, மருந்து வாங்கி உட்கொண்டானா ?” என்றெல்லாம் சாத்தப்பர் அந்த ஆளை வினவினார். அந்த ஆள் அவ்விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு வரவில்லை. பெரும்பாலான வேலைக் காரர்கள் அப்படிப்பட்டவர்கள் தாமே !

சாத்தப்பர் தாமே முருகன் வீட்டுக்குச் சென்றார். பணமில்லாததால் அவன் மருத்துவரிடம் உடம்பைக் காட்டவில்லை என்று அறிந்தார். அங்கிருந்து மருத்துவர் வீட்டுக்குச் சென்றார். அவரை அழைத்துக் கொண்டு போய் முருகனைப் பார்க்கச் செய்தார் ; மருந்தும் கொடுக்கச் செய்தார்.

"முதலாளி, இதற்கெல்லாம் தாங்கள் அலையலாமா ? ஓர் ஆளை அனுப்பினாலே போதாதா ?" என்று முருகனுடைய அம்மா கேட்டாள்.

"அம்மா, இது உயிரைப் பொறுத்த செயல். உள்ளத்தின் உணர்வைப் பொறுத்த செயல். இதற்கெல்லாம் வேலைக்காரர்களை விடக்கூடாது" என்று சொல்லிச் சென்றார் சாத்தப்பர்.

அவருடைய அன்பை எண்ணி அவளும் முருகனும் உருகினார்கள். முருகன் விரைவில் நலம் பெற்றான்.

கருத்துரை- பெரியோர் தம்மை அண்டியவர்கள் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவர்களானாலும், தம் மதிப்பை மறந்து, அவர்கள் இருப்பிடம் சென்று, துன்பத்தை நீக்குவார்கள்.