பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை உரைநலம் திருமதி டாக்டர் இராதா தியாகராசன் அம்மையார் (முன்னாள் துணைவேந்தர்) உரைவேந்தர் உரை வரையும் முறை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, 'நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரைஅமைவதால், படிப்போர் உள்ளத்தில்அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ப உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்துக்கு ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. . கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரையும் அமைந்திருப்பதால், படிக்கும் போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றது.