பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலியும் மருத்துவனும்

காட்டில் இருந்த ஒரு புலிக்கு வயிற்றில் நோய் கண்டிருந்தது. அது பொல்லாத நச்சு நோய். அந்த நோய் ஏற்பட்டிருந்ததால் அதனால் எவ்விதமான உணவும் உட்கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் மெலிந்து வந்தது. அப்படியே நோய் வளர்ந்து வந்தால், தான் இறந்துபோக நேரிடுமென்ற அச்சம் புலிக்கு உண்டாகியது.

தன் நோயை எவ்வாறு தீர்ப்பது என்று புலி சிந்தனை செய்துகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது. புலி அதனிடம் தன் நோயைத் தீர்க்க ஒரு வழி கூறும்படி கேட்டது.

“பக்கத்து ஊரில் ஒரு மருத்துவன் இருக்கிறான். அவன் இது போன்ற நச்சு நோய்களைத் தீர்ப்பதில் வல்லவன். அவனைப் போய்ப் பார்” என்று கூறி விட்டு, நரி தன் வழியில் சென்றது.

புலி மெல்ல மெல்ல நடந்து மருத்துவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தது.

அந்த நச்சு மருத்துவன் புலியின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கினான். அதற்குத் தகுந்த மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்தினான்.