பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு என்னும் பீடிகையோடு அவர் கம்பனின் சொற் சுருக்கத்தையும் கவிநயத்தையும் எடுத்துக்காட்டி விளக்கி அவையாரைச் சுவைக்கச் செய்வார். அவர் பேசச் செல்வதற்குமுன் பேச்சுக்குரிய பொருள் பற்றிச் சிந்தித்துச் சிறு குறிப்பு ஒன்றை வரைந்து கொள்வது வழக்கம். அக்குறிப்பை உரை நிகழ்த்தும் இடத்திற்கு உடன்கொண்டு செல்லமாட்டார். ஆனால் அங்கு நிகழ்த்தும் உரை முற்றிலும் அக்குறிப்பை ஒட்டியே அமைந்திருக்கும். இது கொண்டு இவருடைய சிந்தனைத் தெளிவையும் நினைவாற்றலையும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்களிடம் அன்பு பிள்ளையவர்கள் மாணவர்களிடம் பேரன்பு கொண்டவர். இவர் மாணவர்களை 'ஐயா, ஐயா என்ற அக மகிழ்ச்சியோடு அன்பொழுக அழைக்கும் இன்ப ஒலி இன்றும் என் செவிகளில் இனிது ஒலித்துக் கொண்டிருக்கிறது. தம்மிடம் பயிலும் மாணவர்கள் சிறப்பாகத் தேறிச் சீராக வாழ வேண்டும் என்பதில் இவர் அளவற்ற ஆர்வம் கொண்ட அருளாளர். அதற்கேற்ப அரிய நூல்களையும் ஐயம் திரிபு அறியாமைக்கு இடமின்றி அருமையாகப் பாடம் சொல்வார். தாம் அரிதில் வருந்திச் சேர்த்த தமிழ் வளத்தைத் தம்மாணவர் வருந்தாமல் எளிதில் பெறுமாறு வாரி வழங்குவார். தாம் முயன்று வரைந்து வைத்துள்ள அரிய நூற்குறிப்புக்களை மாணவர்கட்குக் கொடுத்துப் பயன்பெறச் செய்வார். தாம் பாடம் கேட்டநூல்களைப் பிறர்க்கு முறையாகப் பாடம் சொல்லவும், கட்டுரை, ஆய்வுரைகள் வரையவும் அறிஞர் அவையில் அஞ்சாமல் அடக்கமாக உரையாற்றவும் மாணவர்கட்குப் பயிற்சியளிப்பார், தம்மைக் கண்டு அளவளாவ வரும் அறிஞர்கள், புலவர்கள், செல்வர்கட்குத் தம் மாணவர்களை அறிமுகப்படுத்தி வைப்பார். - மாணவர்களின் ஆக்கத்தில் அவர் காட்டிய அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் எடுத்துக்காட்டாக என்னைப் பற்றிய சில செய்திகளை இங்குத் தந்துரைப்பது தவறாகாது என்று கருதுகின்றேன். நான் பிள்ளையவர்களிடம் மாணவனாக அணுகியபொழுது ம.விஜயராகவன் என்னும் பெயருடையவனா யிருந்தேன். அது என் பெற்றோர் எனக்கு இட்டு அழைத்த பெயர். நான் மாணவனாக அமர்ந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, "உங்கள் பெயரில் ஒரு மாற்றம் செய்யலாம் என்று நினைக்கின்றேன். இராகவனுக்கு அடைமொழி எதற்கு? விஜயம் இன்றி இராகவன் இல்லை. ஆகவே உங்கள் பெயரை அட்ைமொழியின்றி இராகவன் என்று மாற்றிக் கொள்ளுங்கள் இராகவன் என்னும் பெயர்