பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80 ⚫ நல்வழிச் சிறுகதைகள்

ஆயத்தமாகியது. சுறுசுறுப்புடன் பெரியதம்பி தன் வேலை ஓங்கி அதன்மீது எறிந்தான். வேல் புலியின் விலாப்புறத்தில் பாய்ந்தது. அது தடாலென்று சாய்ந்தது.

செத்து விட்டது புலி என்று எண்ணிக்கொண்டு பெரியதம்பி புலியை நெருங்கினான். ஆனால், அது சாகவில்லை. சாகும் அளவுக்கு வேல் ஆழமாகப் பாயவில்லை. பெரியதம்பி நெருங்கியவுடன் அது திடீரென்று எழுந்தது. பாய்ந்து தாக்கியது.

பெரியதம்பி பயந்து சும்மா இருந்து விடவில்லை. அதனோடு போராடினான். அது தன் கால் நகங்களால் உடல் முழுவதிலும் கீறுவதையும் பொருட்படுத்தாமல் அதனோடு மல்லுக்கட்டி நின்றான். தன் வலிவை எல்லாம் பயன்படுத்தி அதன் வாயைப் பிளந்து கிழித்தான். அதன் விலாவில் பாய்ந்து தொங்கிக் கொண்டிருந்த வேலைப் பிடுங்கி அதன் தொண்டையில் செலுத்தினான். வாயைப் பிளந்து கொண்டு அது தன் கடைசி மூச்சை விட்டது.

இறந்து போன அந்தப் புலியை இழுத்துக் கொண்டே ஊர் எல்லைவரை வந்து விட்டான். அதற்கு மேல் அவனால் நடக்க முடியவில்லை. புலி தன் நகத்தால் கீறிய காயங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டே வந்ததால் அவன் வலுவெல்லாம் பறந்து விட்டது. சோர்ந்து போய்க் கால்கள் தடுமாறிக் கீழே விழுந்து விட்டான்.