பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 நல்வழிச் சிறுகதைகள்

ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரர் அன்னதானம் செய்தார். அவர் தெய்வத்துக்கு நேர்ந்து கொண்ட படி நூறு பேருக்கு அன்னதானம் செய்தார். அந்த நூறு பேரில் இந்தப் பிச்சைக்காரனும் ஒருவனாகப் போய்ச் சேர்ந்தான்.

அன்னதானம் என்றால் வெறும் சோற்று உருண்டையல்ல; நல்ல சாப்பாடு-வடை, பாயசத்தோடு கூடிய அறுசுவையுண்டி ! பிச்சைக்காரன் அதுபோல் அவன் ஆயுளில் சாப்பிட்டதேயில்லை.

அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இது போல் நல்ல சாப்பாடு இனிமேல் கிடைக்காது. இரண்டு மூன்று நான் சாப்பாட்டை ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிட்டுவிட வேண்டியதுதான். இந்த எண்ணத்தோடு மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டான் அவன்.

சாப்பிட்டபின் எழுந்திருக்கக் கூட முடியவில்லை. மூச்சைப் பிடித்துக்கொண்டு எழுந்தான். கை கழுவி விட்டுப் பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தான். வழியில் தொண்டையை என்னவோ செய்வது போலிருந்தது. குமட்டிக்கொண்டு வந்தது. அவ்வளவுதான். சாப்பிட்டதெல்லாம் அப்படியே வாந்தியெடுத்தான்.

“என்ன வயிறு இது !’ என்று வருத்தத்தோடு கூறிக்கொண்டு சென்றான் பிச்சைக்காரன்.

கருத்துரை :- காள்தோறும் உழைக்கவேண்டும். உழைத்துச் சாப்பிடவேண்டும் என்பதற்காகவே வயிறு ஒரு வேளையுணவை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அளவுடையதாய் உளளது.