பக்கம்:கள்வர் குகை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

அந்த அடியில் இருந்த கல்லை அழுத்திக்கொண்டு, மேலேயிருந்த பாறாங்கல்லைப் புரட்டினான். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச தூரம் தட்டித் தடவியபடி நடந்து சென்றான். பிறகு எங்கிருந்தோ வெளிச்சம் வந்தது. அந்தக் குகை முழுவதும் தகதகவென்று ஒளிவீசியது. அங்கு குவித்திருந்ததெல்லாம், தங்கம், வெள்ளி, வைரம் முதலிய விலையுயர்ந்த பொருள்கள். அவற்றில் சிறிது சிறிது அள்ளித் தன் வேட்டியில் மடிகட்டிக்கொண்டான். விறுவிறுவென்று வெளியில் வந்தான். நேராகக் குதிரையேறித் தன் குடிசைக்குப் புறப்பட்டான்.

அப்படிப் புறப்பட்டுப் போனவன் அந்தப் பாறையை மூடி வைக்காமல் போய்விட்டான். அதன் பிறகு அன்று மாலையில் சந்தித்த மூன்று ஆசாமிகளும் யாரோ, தங்களைக் கண்டு பிடித்துவிட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார்கள். அதற்குத் தகுந்தபடி, ஏற்பாடு செய்து கொள்ளத் திட்டமிட்டார்கள். அடுத்தநாள் காலையிலிருந்து மூன்று பேரும் மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்து, அங்கு வரும் ஆளைப் - பிடித்துவிடுவது என்று திட்டமிட்டுக்கொண்டார்கள்.

நேராகத்தன் குடிசை சென்ற நம்பி, அங்கே தன் அப்பா இல்லாதபடியால் மறுபடியும் மனம்போன போக்கில் குதிரையைத் தட்டிவிட்டான், கடைசியில் நகரத்தின் அருகில் வந்து விட்டான். போய்ப் பாண்டிய மன்னனிடம் இந்தச் செய்தியைக் கூற வேண்டுமென்று தோன்றியது. நேராக அரண்மனைக்குச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_குகை.pdf/14&oldid=1054997" இலிருந்து மீள்விக்கப்பட்டது