55
அந்தப் பையனுக்கு ஏழு வயதும் பெண்ணுக்கு ஐந்து வயதும் ஆகியது. பிஞ்சுக் குழந்தைகளாயிருந்த போதிலும் அவர்கள் தங்கள் தாயாரின் அன்றாட வேலைகளில் உதவி செய்ய ஆவலுடன் முன்வந்தார்கள். பெரும்பாலும் அந்த வெளி நிலத்திற்குச் சென்று காய்ந்த சுப்பிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
ஒருநாள் வழக்கம்போல் அவர்கள் சுப்பல் பொறுக்கச் சென்றார்கள். அன்று அந்தப் பையன் தன் கையில் ஒரு காட்டரிவாளை ஏந்திக்கொண்டு சென்றான். அந்தக் காட்டரிவாளின் கைப்பிடி நீண்ட மூங்கில் மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அவன் தன் எதிரில் தென்பட்ட சிறு மரங்களிலிருந்த கொம்பு குச்சிகளை அந்தக் காட்டரிவாளால் சிவுக் சிவுக் கென்று வெட்டித் தள்ளினான்.
இவ்வாறு குச்சி வெட்டிக் கொண்டிருந்த அவன் அதை நிறுத்திவிட்டுத் தன் தங்கையின் எதிரில் சென்று நின்று போர் வீரன் வாள் வீசுவது போல் தன் அரிவாளை வீசிக் காண்பித்தான். அவன் சுழற்றச் சுழற்ற அந்தக் காட்டரிவாள், மின்னி மின்னிப் பாய்ந்தது.
தரையில் பனி படிந்திருந்து ஈரமாகியிருந்ததால் அவன் கால் வழுவியதோ, கத்தியின் பளுத்தாங்காமல் அவன் கை தளர்ந்ததோ தெரியவில்லை, நாடகங் காட்டிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் பிஞ்சுக் கைகளிலிருந்து அரிவாள் நழுவிப் பறந்தது.