பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

பொழுதுகூடத் தடுத்துப் பார்த்தாள். முத்து விடாப் பிடியாக அவளை இழுத்துக்கொண்டு போனான். தோட்டத்தின் வாயில் கதவிலே “நாய் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்டிருந்தது.

“உள்ளே போனால் நாய் கடித்துவிடும்” என்று அங்கேயே உட்கார்ந்துவிட்டாள் கமலம். முத்து உள்ளே கதவுக் கம்பிகளுக்கிடையே உற்றுப் பார்த்தான். நாயொன்றும் கண்ணுக்குப் புலப்படவில்லை. “நாயும் இல்லை, ஒன்றும் இல்லை. இதெல்லாம் எல்லோரையும் பயப்படுத்தி ஏமாற்ற அப்படி எழுதியிருக்கிறது” என்றான் முத்து. “இது திருட்டு அல்லவா? திருடுவது பாவம்” என்று மறுபடியும் கமலம் சொன்னாள்.

“நீ வேண்டுமானால் இங்கேயே இரு. நான் உள்ளே புகுந்து பை நிறையப் பழம் பறித்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, முத்து கதவில் ஏறி, உள்ளே குதித்து மரத்தில் ஏறினான். பை நிறையப் பழங்களைப் பறித்துக் கொண்டான். கீழே இறங்கும்போது உறுமிக்கொண்டு ஒரு நாய் அங்கு வந்தது.

முத்து பயந்துபோய் ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு வெளியே தாவ முயன்றான். ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை. வெளியே தாவ முடியாமல் அந்தத் தோட்டத்து வேலி மேலேயே ‘பொத்’ சென்று விழுந்தான். வேலிமுள் அவன் உடம்பெல்லாம் தைத்துவிட்டது. வேகமாக வெளியேற முயன்றதால் வேலியில் உள்ள முள்பட்டுச் சட்டையும் கிழிந்து போயிற்று. பழப்பையையும் எடுத்து வர முடியவில்லை. அது தோட்டத்திற்குள்ளேயே விழுந்துவிட்டது.

அவன் உடம்பில் தைத்திருந்த முள்ளை எல்லாம் மெதுவாக ஒவ்வொன்றாகக் கமலம் எடுத்துவிட்டாள். அந்தக் காயங்களிலிருந்து ரத்தம் வடியும்போதெல்லாம் அவளுக்குக் கண்ணீர் வந்தது.

“அம்மாவுக்குத் தெரிந்தால் ரொம்பவும் வருத்தப் படுவார்கள்” என்று சொல்லிக்கொண்டே அவள் தேம்பினாள்.

ம.மு -3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/38&oldid=1090625" இலிருந்து மீள்விக்கப்பட்டது