பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழ் விளர்கிறது!

சொல்லழகு மனம்பறிக்கப் புலவன் பாட்டுச்

சுவையறிந்து பரிசளித்துத் தமிழ்வ ளர்த்த

நல்லதமிழ் மன்னர்வழிப் பிறந்தி ருந்தும்

நாடாளும் அமைச்சர்களாய் வீற்றி ருந்தும்

மெல்லமெல்லப் பிறமொழியைத் திணிப்ப தற்கு

மேலுதவி செய்துவரும் போக்கைக் கண்டு

நல்லவர்கள் மனம்வருந்தப் புல்ல ரெல்லாம்

நன்மைவந்த தெனக்களித்துக் குதிக்கின் றாரே !


பொய்யான கருத்தெல்லாம் தமிழர் நாட்டில்

புகுத்துகின்ற கதைகளையே வெறுத்தொ துககச்

செய்யாரோ எனநினைத்தால் கலைந யத்தைச்

செந்தமிழில் இறக்கிவைத்த கவிதை யென்று

மெய்யாக விழாக்கள்பல நடத்தி வைத்து

மேன்மேலும் அக்கதையே பெருக்கு வார்கள்

செய்யாதே என்பதனைச் செய்வ தற்கே

திரண்டோடி வருவாரிம் முரண்டர் கண்டீர் !


தென்றமிழில் வடமொழியின் சொற்கள் வந்து

திரிந்ததென ஆராய்ச்சி நடத்திக் காட்டி

அன்றிருந்த தமிழ்ச்சொல்லும் வடசொல் லென்றே

அழிவழக்குப் பேசிடுமோர் கூட்டத் தாரும்

இன்றமிழை வளர்க்கின்ரறோம் யாங்க ளென்றே

ஏமாந்த தமிழ்நாட்டார் முன்னே வந்து

நின்றிருப்பார் பூமாலை கைச்செண் டோடே

நிகழ்த்திடுவார் வரவேற்புத் தமிழர் தாமே,