பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆடு மேய்க்கும் அண்ணா-உன்றன்
கூட நானும் வருவேன்
காடு மேடும் சுற்றி-நல்ல
காட்சி காண வேணும்.

துள்ளி ஓடும் ஓடை-அதில்
சோம்பிப் படுக்கும் எருமை
குள்ள வாத்துக் கூட்டம்-வெள்ளைக்
கொக்கும் அங்கு காண்பேன்.

பச்சை அலைகள் போலே-அசையும்
பயிர்கள் வளரும் வயல்கள்
உச்சிக் கிளையில் கொஞ்சும்-அருமைப்
பச்சைக் கிளியும் பார்ப்பேன்.

அரச மரத்தின் கனியை-உண்டு
அழகாய்ப் பேசும் மைனா
கரிய குயிலின் பாட்டை-நன்கு
காதிற் கேட்டு மகிழ்வேன்.

காட்டுச் செடியும் கொடியும்-பற்றி
ஆட்டுக் குட்டி தின்ன
ஓட்ட மாகச் சென்றே-பெரிய
உதவி நானும் செய்வேன்,

15