பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்த இடத்தில் தங்கி மெதுவாகப் புதையலைப் பற்றித் துப்பு விசாரிக்கலாம் என்று அவனும் அவனுடைய கூட்டாளிகளும் தீர்மானித்திருக்க வேண்டும் என்று தங்கமணி இந்தத் திருட்டைப் பற்றி எண்ணமிட்டான்.

உடனே அவன் சுந்தரத்தையும் கண்ணகியையும் எழுப்பினான். “போடா, தொந்தரவு செய்யாதே - இந்த நாள் முழுவதும் தூங்கலாம் போலிருக்கிறது. காலெல்லாம் வலி” என்று கண்ணைத் திறக்காமலேயே சுந்தரம் பேசிவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

“டேய், பெட்டி திருட்டுப் போய்விட்டது” என்று தங்கமணி சொன்னானோ இல்லையோ சுந்தரம் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். தூக்கமெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கண்ணுப் பாட்டியின் கட்டிலில் படுத்திருந்த கண்ணகி அங்கே ஓடி வந்தாள்.

“அப்பவும் எனக்குத் தெரியும். இந்தக் கோமாளி சத்தம் போட்டுப் பேசுவதை யார் வேண்டுமானாலும் வெளியிலிருந்து கேட்டிருக்கலாம்” என்று கண்ணகி முகத்தைச் சுளித்தாள். ஏமாந்து போனதை எண்ணி வருந்துவதை அவள் முகம் நன்றாகக் காட்டிற்று.

“இப்பொழுது குற்றம் சாட்டிக் கொண்டிருக்க நேரமில்லை. காலை உணவு அருந்திவிட்டு உடனே சங்ககிரி மலை உச்சிக்குச் சென்றாக வேண்டும். தாமதம் செய்தால் நாம் ஏமாந்து போவோம்” என்றான் தங்கமணி.

மூவரும் அவசரம் அவசரமாகக் காலை உணவை முடித்துக் கொண்டார்கள். ஜின்காவுக்கும் அவர்கள் அவசரம் புரிந்து விட்டது. அது தோசையை வாயில் போட்டு வேகமாகக் குதப்பிக் கொண்டிருந்தது.

ஏன் இவ்வளவு அவசரம் என்று கண்ணுப் பாட்டிக்கு விளங்கவே இல்லை. எப்பொழுதும் உற்சாகமாக விகடம் பேசும் சுந்தரமும் பேசாதிருந்தான்.

39