பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவர்கள் இவ்வளவு உற்சாகமாகப் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜின்கா மேஜைமேல் தாவி நின்று ஜிங் ஜிங் என்று குதித்தது. அந்தக் குரங்கு அப்படிக் குதிப்பதால் தான் அதற்கு ஜின்கா என்ற பெயர் ஏற்பட்டது. தங்கமணி செல்லமாக வளர்த்து வருகின்ற குரங்கு அது. எத்தனையோ தீரச் செயல்களை அது புரியவல்லது.

பிறகு வழக்கம்போல தங்கமணியின் தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டு எல்லாரையும் கூர்ந்து கவனித்தது. தங்கமணி ஜின்காவை மிகுந்த பிரியத்தோடு தட்டிக் கொடுத்தான் அதற்கு அவன் பலவகையான உபயோகமான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்திருந்தான். தங்கமணியின் குறிப்பறிந்து அதன்படி, நடப்பதில் ஜின்கா புகழ்பெற்றிருந்தது.

சங்ககிரிக்கு அடுத்த நாள் நீலகிரி எக்ஸ்பிரசில் போவதாக ஏற்பாடு ஆகியிருந்தது. அதற்கு வேண்டிய பயணச் சீட்டுகளும் முன்னாலே ரிசர்வ் செய்ததோடு சங்ககிரிப் பாட்டிக்கும் தகவல் எழுதிப் பதிலும் கிடைத்திருந்தது.

ஒரு மாதம் சங்ககிரியில் இருப்பதற்கான துணிமணிகளையும், சோப்பு, கண்ணாடி முதலியவற்றையும் எடுத்துப் பெட்டியிலே வைப்பதில் மூவரும் அடுத்த நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தார்கள்.

“கண்ணகி, உன்னுடைய பவுடர் டப்பாவை எடுத்து வைத்தாயா? அதில்லாமல் நீ வெளியே கிளம்ப மாட்டாயே?” என்று கேலியாகக் கேட்டான் சுந்தரம்.

“அதை வைக்க மறந்துவிட்டேன், நல்ல வேளை நீ ஞாபகப்படுத்தினாய்” என்று கூறிவிட்டு பவுடர் டப்பாவை எடுக்க ஓடினாள் கண்ணகி.

அவளையும் முந்திக் கொண்டு ஜின்கா தாவிக் குதித்து அந்த டப்பாவை எடுத்து வந்தது. வந்த அவசரத்தில் அது தடுக்கி விழுந்ததால் பவுடர் ஜின்காவின் முகத்திலும், உடம்பிலும் கொட்டிவிட்டது. பாதி டப்பா காலியாகிவிட்டது.

3