பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“பாட்டி, நாங்கள் மறுபடியும் சங்ககிரி மலைக்குப் போகிறோம். மத்தியான்ன உணவெல்லாம் வேண்டியதில்லை. உங்களைத் தேடி இந்த ஜின்கா மட்டும் தனியாக வந்து ஒரு கடிதம் கொடுத்தால் அதில் உள்ளபடி உடனே வேகமாகக் காரியம் செய்யுங்கள். இது ரொம்ப முக்கியம்” என்று கூறிவிட்டுப் பாட்டியின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் தங்கமணி முன்னால் புறப்பட்டான். சுந்தரமும் கண்ணகியும் அவனைத் தொடர்ந்து வேகமாக நடந்தார்கள்.

“இதென்னடா, பெரிய மர்மமாக இருக்கிறதே” என்று கண்ணுப்பாட்டி ஆச்சரியப்பட்டாள்.

“ஏதோ, சிறு பிள்ளைகள் விளையாட்டாக இருக்கும், எதற்கும் இன்று வீட்டை விட்டுப் போகாமல் இருந்து பார்க்கலாம். அந்த வண்டிக்காரனையும் காணவில்லை. அவன் இருந்தாலாவது மத்தியான்ன உணவைக் கொடுத்தனுப்பலாம். பகல் ஒரு மணிக்குள்ளாகவே ஒரு வேளை வந்தாலும் வந்து விடுவார்கள்” என்று இப்படிப் பலவாறு எண்ணிக் கொண்டே கண்ணுப் பாட்டி சமையல் வேலையில் முனைந்தாள்.

மூவரும் ஜின்காவுடன் போவதற்கு முன்னாலேயே நான்கு பேர் வேகமாக மலையில் ஏறுவதைப் பார்த்தார்கள்.

உடனே தங்கமணிக்கு உண்மை புலப்பட்டுவிட்டது. அந்த நால்வரில் ஒருவன் பாட்டி வீட்டில் புதிதாக வேலைக்கமர்ந்த வண்டிக்காரன் என்பது நிச்சயமாகி விட்டது. அதனால் “நாம் மூவரும் பின்னாலேயே சென்று தடுத்தாலும் அந்த நான்கு முரடர்கள் நமக்குத் தீங்கு செய்ய அஞ்சமாட்டார்கள்” என்றான் தங்கமணி.

“அண்ணா, ஜின்காவிடம் பாட்டிக்குக் கடிதம் கொடுத்து அனுப்பு” என்று அவசரமாகப் பேசினாள் கண்ணகி.

40