பக்கம்:குமண வள்ளல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

குமண வள்ளல்

பாட்டுக் காதில் விழுந்ததும் அதிகாரி வெல வெலத்துப் போனார். “சற்று இருங்கள்; அரசரிடம் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று அவர் புலவருடைய விடைக்குக் கூடக் காத்து நில்லாமல் உள்ளே போய்விட்டார்.

என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்தில் அதிகமான் அஞ்சியே எதிரில் வந்து நின்றான். “புலவர் பெருமான் என் பிழையைப் பொறுக்கவேண்டும். தங்களைப் பாராமல் பரிசிலைக் கொடுத்தனுப்பியது தவறுதான். தங்களை இதுகாறும் அறிந்து கொண்டதில்லை” என்று சொல்லிக்கொண்டே வந்தான்.

புலவர் அதிகமான் புகழை முன்பே கேட்டவர். “ஒளவையாருடைய பாட்டால் தமிழுலகம் அரசர் பிரானை நன்கு அறியும். அத்தகைய வள்ளலைப் பார்த்துப் போகலாமென்று நெடுந்துாரம் வந்ததும் பார்க்க முயலவில்லையே என்ற வருத்தம் மீதூர்ந்தது. அதனால் ஏதோ சொன்னேன்” என்று அவர் சொன்னார்.

அப்பால் சிறிது நேரம் அவர்கள் அளவளாவினர்கள். புலவரைச் சில நாட்கள் தகடுரில் தங்கும்படி வேண்டிக்கொண்டான் அதிகன். அவர் தங்கித் தம் கவித்திறத்தைக் காட்டினர். போர் மூளுமோ என்று அஞ்சியிருந்த நிலையில், நெடுநேரம் புலவரோடு பொழுதுபோக்க முடியவில்லையே என்று அதிகமான் வருந்தினான். அதை அறிந்த புலவர் பின் ஒரு முறை வருவதாகச் சொல்லி விடை பெற்றுக்கொண்டார்.

மறுபடி அவரால் போக முடிந்ததா? அவர் போகலாம் என்ற ஆர்வத்தோடுதான் இருந்தார். ஆனால் அதிகமானுடைய கோட்டையைச் சேரமான் பெருஞ் சேரல் இரும்பொறை முற்றுகையிட்டுவிட்டான் என்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/12&oldid=1361525" இலிருந்து மீள்விக்கப்பட்டது