பக்கம்:குமண வள்ளல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

குமண வள்ளல்

சோறும் கறியும் புகுகின்றன. துவையல் என்ன, நெய் பிழியும் சோறு என்ன, பிற உண்டி வகைகள் என்ன—இவற்றை யெல்லாம் சிறிய சிறிய பொற் கலத்தில் நிறைத்துச் சுற்றிலும் வைத்து, ‘பாடும் புலவர்கள் இவற்றை உண்டு கேடு இல்லாமல் சுகமாக இருக்கட்டும்’ என்று மன்னர் பிரான் உபசரிப்பதாகக் கேள்வியுற்றேன். பிற மன்னர்களிடம் போரிட்டுப் பெற்ற அரிய பொன் அணிகளை மிக எளிதில் புலவர் கூட்டம் பெறும்படி வாரி வழங்குவதாகவும் சொன்னர்கள். தம்மிடம் வந்து நட்டவர்களைச் சமானமாக வைத்து நட்புச் செய்யும் பெருமையுடையவர் என்றும் கேள்வியுற்றேன். முதிரத்தில் இருப்பதாகச் சொன்னர்கள். அங்கே போனால் நிறையக் கொடுப்பார் என்றும் கூறினார்கள். ஒருவர் அல்லர், இருவர் அல்லர், பலர் மன்னர் பிரானுடைய புகழை வாயாரக் கூறினார்கள். அதைக் கேட்டு எனக்கு ஓர் ஊக்கம் உண்டாயிற்று. இங்கே வந்தேன்.”

“எல்லாம் பொய் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?” என்று சொல்லிப் புன்னகை பூத்தான் குமண வள்ளல்.

“அவர்கள் சொன்னது குறைவு என்று தெரிந்து கொண்டேன். ஒரே ஒன்றை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். வந்தவர்களை வாருங்கள் என்று சொல்லத் தெரிந்த மன்னர் பிரானுக்குப் போக வேண்டியவர்களைப் போய்விட்டு வாருங்கள் என்று சொல்லத் தெரியவில்லை. என் வீட்டு நிலையை மறு படியும் எடுத்துரைப்பதற்காக என்னைப் பொறுத்தருள வேண்டும். என் மனைவிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருக்கும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/42&oldid=1362562" இலிருந்து மீள்விக்கப்பட்டது