பக்கம்:குமண வள்ளல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. முதற் காட்சி

ன்றுதான் பெருஞ்சித்திரனாருக்கு எப்படியும் குமணனிடம் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் உறுதியாயிற்று. வீட்டில் உள்ளவர்கள் வறுமையினால் படும் துன்பக் காட்சிகளைக் காணக் காண அவர் மனம் துன்பக் கடலில் மூழ்கியது. அவருடைய முதிய அன்னை எலும்பு உருவமாக நின்றாள். முதுகு வளைந்து தள்ளாடித் தள்ளாடி நடந்தாள். கையில் கோலை ஊன்றிக்கொண்டு குறுக அடியிட்டு நடக்கும்போது, எங்காவது விழுந்துவிட்டால் என் செய்வது என்ற அச்சமே காண்பவர்களுக்கு உண்டாகும். தலை முழுவதும் நரைத்துவிட்டது. வெள்ளை நூலைத் தலையில் பரப்பினாற்போல் இருந்தது: அதன் தோற்றம். வீட்டு வாசலை விட்டு அவள் எங்கும் போவதேயில்லை. திண்ணையிலே சோர்ந்து சோர்ந்து விழுந்து தூங்குவதைத் தவிர அவளுக்கு. வேறு வேலை இல்லை.

அதிகமான் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டுப் பெருஞ்சித்திரனார் வருந்தியதை, அவள் கண்டாள். ‘யார் யாரையோ யமன் விரைவில் கொண்டு போய் விடுகிறான். எனக்கு மாத்திரம் முழு ஆயுள் போட்டு வைத்திருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் பூமிக்குப் பாரமாக இருக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருக்கும்போது என் உயிர் எளிதில் போய்விடுமா?’ என்று அவள் தன் நிலையை நினைந்து வருந்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/15&oldid=1375426" இலிருந்து மீள்விக்கப்பட்டது