பக்கம்:குமண வள்ளல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

குமண வள்ளல்


படுத்தாமல் என்னுடைய அன்பைக் கருதித் தாங்கள் வரவேண்டும்” என்று கூறினான். புலவர் மீண்டும் வருவதாகச் சொல்லி வந்தார். மறுபடியும் ஒரு முறை போனார்.

இடையில் சில காலம் செல்லாமல் பின்பு ஒரு முறை சென்றபோது அவன் உலக வாழ்வை நீத்து விட்டான். இந்தச் செய்தியை அவர் கேள்வியுற்று மிக்க துயரத்தை அடைந்தார். அடிக்கடி வந்து பழகலாம் என்ற நினைவுடன் வந்தவர், விதி வேறு விதமாக முடிவு கட்டியதை எண்ணி எண்ணி இரங்கினார். புலவர் பலரைப் பாதுகாக்கும் இயல்புடையவன் வெளிமானென்பதை உணர்ந்தவர் பெருஞ்சித்திரனார். அப் புலவர்களெல்லாம் அவனைக் காணாமல், தம்மைப் பேணுவார் இன்றி வருந்துவார்களே என்பதை எண்ணித் துன்புற்றார். கண்ணீர்க் கடலிடைச் சுழன்று வருத்தப்படுவதைவிட இறந்து போவதே மேல் என்று அவர்கள் நினைத்தல் கூடும் என்ற எண்ணமும் வந்தது.[1]

வெளிமானுக்கு யாரேனும் மக்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார். அவனுக்கு ஒரு தம்பி இருக்கிறானென்றும், அவனே இப்போது நாட்டை ஆளுகிறானென்றும் கேள்வியுற்றார், அவனையாவது பார்த்து விட்டுச் செல்லலாம் என்று நினைத்தார்.

அப்படியே அரசன் மாளிகைக்குச் சென்று வெளிமான் தம்பியாகிய இளவெளிமானைக் காண முயன்றார். அங்கே இருந்தவர்கள் எளிதில் அவருக்கு வேண்டிய செய்திகளைச் சொல்லவில்லை. “இங்கே இருப்பவர்களிற் பலர் தமிழருமை அறியாதவர்கள்” என்று.


  1. புறநானூறு, 238.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/60&oldid=1362593" இலிருந்து மீள்விக்கப்பட்டது