பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெளனப் பெரும் பேச்சு

91

எடுத்துக் காட்ட அக்கலைகளுக்குள்ள திறமையின் எல்லை இங்கும் தோற்றமளிக்கிறது. உணர்ச்சியை உணர்ந்தது போன்றே காட்டும் ஆற்றல் கவிதைக்கும் இல்லை. அதுவும் ஓரளவு கூறி அதற்கு மேல் மெளனத்தின் வாயிலாகவே உணர்த்த வேண்டும்.

பெறுதற்கரிய சமாதி நிலையடைந்து பேரின்பம் பெற்றுத் திரும்புபவனும் அவ்வின்ப உணர்ச்சியை எடுத்துக்கூற வார்த்தை யகப்படாது ஏமாற்றமடைகிறான். அவ்வின்பத்தைத் தேடித் திரிந்தபோது குறை குடம் தளும்புவதுபோன்று என்னென்னவோ வியாக்கியானம் செய்தவன் தன் முயற்சி கைவந்த போது நிறை குடம்போல மெளனியாய்விடுகிறான். பலவிதமான உபமானங்களால் பேரின்ப உணர்ச்சிகளை விளக்க முயன்றவர்களும் முடிவிலே தங்கள் சக்திக் குறைவை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சொல்லுகைக்கில்லாத நிலை என்றே அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆகவே, ஆழ்ந்த உணர்ச்சிகளை உணர்வதுபோல முற்றிலும் உணர்த்துதல் இயலாது. கலைகள் அம் முயற்சியில் பெரியதோர் வெற்றியை எய்தினாலும் அவைகளும் தாம் வெளிப்படையாகக் கூறியவற்றோடு, கூறாது மெளனமாய் உள்ளத்தின் கற்பனைக்கு விட்ட பாகத்தின் பேருதவியை எதிர் பார்த்தே இருக்கின்றன. ஓரளவிற்கு உணர்ச்சிகளை உணர்த்தலாம்; அதற்கு மேல் எல்லாம் மெளனமே. அந்த மெளனத்தின் பேச்சினிலேதான் உணர்ச்சியின் உள்ளம் பூரணமாய்த் துடித்துக்கொண்டிருக்கிறது.