பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்டு வழிதனிலே

13

இருள் அரசி தன் கரும் போர்வைகளை ஒவ்வொன்றாக உலகின்மேல் வீசிக்கொண்டிருக்கின்றாள்; பொருள்களெல்லாம் மங்கித் தோன்றுகின்றன. மலையின் நீல நிறம் கறுப்பாக மாறி இருளோடு இணையத் தொடங்கிற்று. மரங்கள் இருட்டுக் குவியல்களாக மாறின. அழகுநாக் குருவிகள் கூட்டங்கின. கனத்த குரலில் ஒன்றிரண்டு வார்த்தை பேசிய செம்போத்தும் நாவொடுங்கியது.

யாரோ பின்னால் என்னைத் தொடர்ந்து வருகின்றது போன்ற உணர்ச்சி ஓங்கிக்கொண்டே இருந்தது. பாரதியார் பாட்டிலுள்ள உணர்ச்சியின் பிரதிபலிப்போ அல்லது! உண்மையில் யாராவது வருகிறார்களோ தெரியவில்லை. சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்தேன். அங்கு யாரையும் காணோம்.

இருள் செறிந்து படிகின்ற சந்தியின் இறுதியிலே மலைப் பாதைகளிலும் காட்டு வழிகளிலும் தனிமையாக இயற்கையோடு ஒன்றி உலாவுகின்றபோது யாரோ ஒருவர் பின்னால் தொடர்ந்து வருவது போன்ற இத்தகைய உணர்ச்சி ஏற்படுகிறது. கருநீலப் பட்டுடுத்தித் தன் முன்தானையால் அவனியை அணைத்து உறக்கத்தில் ஆழ்த்தி ஓய்வு கொடுக்க வருகின்ற இரவன்னையோ அல்லது நாள்தோறும் புதிய புதிய மலர்களை அணிந்து மிளிரும் காட்டாற்றுத் தாவணியை வளைத்து வளைத்து அநாயசமாகத் தன் உடம்பின்மேல் வீசிக்கொண்டு தோன்றும் வனதேவதையோ—யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒவ்வொரு தடவையும்