பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்டு வழிதனிலே

13

கிறானோ தெரியவில்லை. அவனுடைய வெறுப்பும் தந்நலமும் வானில் எழுந்து பறக்கக்கூடிய உள்ளத்தின் சிந்தனை ஆற்றலைக் கூடக் கட்டுப்படுத்தி விடுகின்றனவே, என்ன விந்தை! இதை உணராத மனிதன் “இயற்கையில் எங்கும் சுயநலந்தான் தாண்டவமாடுகிறது; விட்டில் பூச்சியை மைனாக் குருவி பிடிக்கிறது; மைனாவை வல்லூறு பிடிக்கிறது; வல்லூறை இராசாளி பிடிக்கிறது. இவ்வாறு எங்கும் சுயநலந்தான்” என்று பேசித் தன் அறிவின் திறமையைப் பற்றிப் பெருமையடைந்து கொண்டு, தனது குறைகளையும் சிறுமைகளையும் ஒழிக்க முயலாது திரிகின்றான். நம் உள்ளத்தை உயர்த்தி உலகமே ஒன்றென உணரும் பெரு நிலைக்குச் செலுத்தக் கூடிய பேராற்றல் இயற்கைக்கு உண்டென்பதை மனிதன் அறிந்துகொள்ள விரும்புவதில்லை. அவனுக்குத் தனிமையின் இனிமை கசக்கின்றது. தனிமையின் மென்பேச்சு, இயற்கையின் வண்ணமறைச் சிறுகுரல் அவன் செவியில் விழுவதில்லை. இயற்கையில் திளைத்த கவிஞர்கள் அதை அறிந்து கூறியிருக்கிறார்கள். அதை ஒவ்வொருவனும் தன் உள்ளத்தில் உணரும்படியாக இயற்கையோடு உறவாடுவதை உணவருந்துவது போன்ற முக்கியமான செயலாகக் கைக்கொள்ள வேண்டும்.

“இயற்கை வாழ்விற்குத் திரும்பிப் போ” என்று பலர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு முதற் படியாக இயற்கையோடு தனிமையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறு நாழியாவது உறவாடு என்று நான் கூறுகிறேன். அப்படி உறவாடும் போது வாழ்க்-