பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்திய அடிப்படை


சுநாதரை மையமாகக் கொண்டு எத்தனையோ அழகிய ஓவியங்கள் தீட்டப் பெற்றிருக்கின்றன. அவற்றில் ஒன்றிலே அவர் தம் கரத்தினிலே சுடர் விட்டுக் கொண்டிருக்கும் விளக்கைத் தாங்கியவாறு ஒரு வீட்டை நோக்கி அன்போடு நிற்பது போலக் காட்சியளிக்கிறார். வீட்டின் கதவோ சாத்தி உட்பக்கம் தாளிடப்பட்டிருக்கிறது. அந்த மகானிடமிருந்து வரும் ஒளியைப் பெற யாருமே கதவைத் திறந்து வெளி வரவில்லை. கிறிஸ்து முனி கருணையோடுதான் காத்திருக்கிறார். ஆனால் யாராவது அதைக் கவனிக்க வேண்டுமே!

இந்த உயர்ந்த கற்பனையின் மூலம் ஓவியன் ஒரு பெரிய உண்மையை நமக்குக் காட்ட முற்பட்டிருக்கிறான். இறைவன் தனது அருளை வழங்கத் தயாராகத் தான் இருக்கிறான். அவனுடைய கருணைக்கு எல்லையே இல்லை. அவன் கருணைக் கடல். ஆனால், அந்த அருளைப் பெறுவதற்கு யார் நினைக்கிறார்கள்? எல்லோருடைய மனக்கதவுகளும் சாத்தித் தாளிடப்பட்டுத்தான் கிடக்கின்றன. அத்திப் பூத்தது போல எங்காவது ஒருவர் இதற்கு மாறாக இருந்தால் அவரையும் உலகம் புறக்கணித்து விடுகின்றது. அவருடைய பெருமையை உணரத் தொடங்கினாலும் அதற்குள் ஓர் ஆயிரம் ஆண்டுகளாவது மறைந்தோடிவிடுகிறது.