பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்டு வழிதனிலே

7

வின்றி, உறக்கமின்றிப் புரண்டுகொண்டிருக்கும் அலைகளின் அழகும், அகன்று விரிந்து நீல மணிப் பரப்பாய்க் கிடக்கும் கடலின் காம்பீரியமும் அவர்கள் உள்ளத்தைக் கவரா; அவற்றிலே அவர்கள் மனம் செலுத்த மாட்டார்கள். உத்தியோக ஊழல்கள், ஊர் வம்புகள், குடும்பத் தொல்லைகள் இவற்றையெல்லாம் அவர்கள் கூடவே தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள். நத்தைக்குக்கு வீட்டுச் சுமை எப்பொழுதும் முதுகின் மேலே; அதுபோல அவர்களுக்கு வாழ்க்கைச் சுமை. நீலமேனி நெடுஞ் சாகரத்தை அவர்களுடைய கண்ணிலே படாமல் காலமாயைக் கடுஞ் சாகரம் மறைத்துவிடும். வாழ்க்கையை ஒரு நொடி மறந்துவிட்டு இயற்கை இன்பத்தை நுகரலாகாதா? அவர்களால் முடியவே முடியாது.

எனக்கு இப்படிப்பட்ட மனிதர்களைப் பிடிக்கிறதே இல்லை. உலாவப் புறப்படும்போது அவர்களை நான் பக்கத்தில் அணுகவிடமாட்டேன். ஆனால், சில வேளைகளிலே எப்படியாவது ஒன்றிரண்டு நத்தையர்கள் எதிரிலே வந்து தொலைவார்கள். அது மட்டுமல்ல; “ஏன் தனியாகப் போகிறீர்கள்? யாரும் துணை கிடைக்கவில்லையா? நான் வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே கூட நடக்கத் தொடங்குவார்கள். “இல்லை, நீங்கள் தொல்லைப்பட வேண்டாம்” என்று கூறுவதற்குள்ளே, “என்ன, இந்த வாரத்து ரேஷன் அரிசியைப் பார்த்தீர்களா?” என்று ஏதாவது பேச்செடுத்து விடுவார்கள். பிறகு அவர்களைத் தப்பவே முடியாது. ஒட்டுமுள் பார்த்திருக்கிறீர்களா? வேட்டியில் ஒட்டிக்கொண்டதே என்று