பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையேறும்போது

36

கின்றார்கள். மலையாளத்து மக்களுக்கு முருகனிடத்திலே ஒரு தனிப்பட்ட பக்தி இருக்கின்றது. அதைக் காணும்போது நமது உள்ளத்திலும் அது ஊற்றெடுக்கத் தொடங்குகின்றது. எங்கு பார்த்தாலும் விதவிதமான காவடிகள். எங்கும் ஒரே பக்தி வெள்ளம்.

நல்ல வெயிலிலே மலையேறும் அடியவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை பொங்கி அதிற் பூசியிருக்கும் திருநீற்றைக் கரைத்துக்கொண்டு விழுகிறது. நீண்ட பெருமூச்சு மார்பை விம்மச்செய்கிறது. உள்ளத்திலே பக்தி தளராவிட்டாலும் மலையேறும் சிரமத்தால் கால்கள் தளர்வடைகின்றன. அந்தச் சமயத்திலே ஒரு கானம் பிறக்கின்றது.

ஏறாத மலையேறி எருது ரண்டும் தத்தளிக்கப்

பாராமல் கைகொடுப்பார் பழநிமலை வேலவனே

வாழ்க்கையெனும் தொல்லை மிகுந்த செங்குத்தான மலையிலே ஏறும்போது நெஞ்சமும், மனமும் தத்தளிக்கத்தான் செய்கின்றன. அம்மலையின் சிகரத்தில் உள்ள வீட்டை அடைவது எளிய செயலா? பல தடவைகளில் மனமுடைந்து போகிறது; நெஞ்சம் வெதும்புகிறது. ஏற முடியாத இந்த மலையிலே ஏறி வருந்துவானேன் என்று தளர்ச்சியுண்டாகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் பழநியப்பனைத் துதித்தால் அவன் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பானா? கருணைக் கடலல்லவா அவன்? நமது வருத்தத்தைப் பார்த்துச் சகியாமல் கைகொடுத்து நம்மைச் சிகரத்திற்கு அழைத்துச் செல்வான். இம்-