பக்கம்:கரிகால் வளவன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. கரிகாலன்

குழந்தை பிறந்தது. எப்படிப் பிறக்க வேண்டுமோ, எப்படி வளர வேண்டுமோ அப்படியெல்லாம் இருக்க வகையில்லை. சோழ மண்டலத்தின் சக்கரவர்த்தியாக விளங்க வேண்டிய குழந்தை, இப்போது ஊர் அறியாமல், நாடு அறியாமல் வளர்ந்து வந்தது.

ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள சிலருக்கு மாத்திரம் தெரிந்தது. ஆட்சியை நடத்தி வந்த அமைச்சர்களுக்கும், சில சான்றோர்களுக்கும் தெரியும். அவர்கள் இதற்கு முன் ஊக்கமில்லாமல் இருந்தார்கள். அவர்கள் முகத்தில் வாட்டமே குடி கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் இரும்பிடர்த்தலையாரிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

‘இளஞ்சேட் சென்னி இருந்து பார்த்து முறைப்படி குழந்தையைச் சீராட்டக் கொடுத்து வைக்கவில்லையே!’ என்ற துயரம் அவர்களுக்கு இப்போது உண்டாயிற்று. ஆண்குழந்தை பிறந்த செய்தி அளவில்லாத மகிழ்ச்சியை உண்டாக்கினாலும் வேறு வகையில் அவர்களுடைய உள்ளம் மறுகியது. குழந்தை பிறந்ததை உலகத்தார் அறியத் தெரிவிப்பது உசிதமன்று என்று தீர்மானித்தனர். சோழ நாட்டில் உள்ள சில வேளிர் கலகம் செய்யக் கிளம்பியிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/19&oldid=1340567" இலிருந்து மீள்விக்கப்பட்டது