பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்டு வழிதனிலே

9

கொண்டு படுத்திருக்கும் நீல மலைகளின் பின்னால் பகலவன் தன் பொற்கிரணங்களைச் சுருட்டிக் கொண்டு மறையத் தொடங்கினான். பூங்காவியைக் கரைத்து அதிலே ஒளி கூட்டி எங்கும் பூசியது போலத் தோன்றிய செவ்வானம் உலகிற்கு ஒரு புதிய வனப்பைத் தந்து கொண்டிருந்தது.

தொலைவிலே பசும்புல்லை மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று வீட்டிலே கட்டுண்டு கிடக்கும் தன் இளங் கன்றை நினைந்து மடி சுரந்து அம்மா என்று கூப்பிடும் ஓசை, அமைதியைப் பெருக்கிக் கொண்டு காற்றில் மிதந்து வந்தது. எங்கோ ஒரு நாய் குரைத்தது. காக்கைகள் கூட்டங் கூட்டமாகத் தம் தங்குமிடங்களுக்குப் பறந்து சென்றன. அவற்றைப் பார்த்தால் இரவு தன் கருஞ்சிறு ஒற்றர்களை ஏவி உலகை வளைத்துக் கைப்பற்றிக்கொள்ள ஏற்ற தருணம் வாய்த்துளதா என்று வேவு பார்த்து வர அனுப்பியவைபோல் காண்கின்றன.

கழனிப் பரப்பினிவே, மாலை மயங்கும் வேளையிலே இயற்கையில் ஒரு பேரமைதி பொங்கிக் கொண்டிருக்கிறது. ஆடுமாடுகளைப் பட்டிக்கு ஓட்டிக்கொண்டு போகும் இடைப்பையன் பாடுகின்ற நாடோடிப் பாட்டு இந்த அமைதியைக் குலைப்பதே இல்லை.

இவற்றிலெல்லாம் நெஞ்சு செலுத்தி மெய்ம் மறந்து நடக்கிறபோதே என் வாய்தானாகவே ஒரு கவிதையை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

மாலைப் பொழுதில் ஒருமேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்