பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையெழுத்து


டைக்கும் பொழுதே நான்முகன் ஒவ்வொருவனுடைய தலையிலும் அவனுடைய வாழ்க்கையமைப்பைத் திட்டமாக எழுதிவிடுகிறான் என்பது பலருக்குச் சம்மதமான கொள்கை. அந்தப் பிரம்மலிபியை மாற்றவே முடியாது என்ற எண்னமும் ஆணிவேரூன்றி அசையாது நிற்கின்றது. அன்றெழுதியவன் அழித்தெழுதப் போவதில்லை என்றும், விதி யாரை விட்டது என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்று மேற்கோள் காட்டிப் பேசுகிறார்கள். மார்க் கண்டன் கதை தெரியாதா என்று மிடுக்கோடு கேட்கிறார்கள்.

ஒவ்வொருவனும் தன்னுடைய விதியைத் தானே எழுதிக்கொள்ளுகிறான் என்று நான் நம்புகிறேன். அதாவது ஒவ்வொருவனும் தன்னுடைய வாழ்க்கையின் போக்கைத் தன் செய்கையாலேயே உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ அமைத்துக் கொள்கிறான் என்பது எனது கட்சி. அப்படியானால் முற்பிறப்புக்களில் செய்த வினையின் பயன் ஒருவனைத் தொடராதா என்ற கேள்வி பிறக்கலாம். முற்பிறப்பில் செய்த வினையென்றாலும் அதுவும் அவனுடைய செயல்தானே? ஆதலால் அது என் கொள்கைக்கு மாறுபட்டதல்ல, பல பிறுப்புக்கள் உண்டா