பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை என் காதலி


தாமரை மலர் இதழ் அவிழ்த்து பொங்கு சுடர் போல விரிந்து நிற்கிறது. ஒரே வனப்பு! ரோஜா அழகாக மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரே சிரிப்பு. அவற்றைப் பார்த்தவுடனே என் உள்ளம் துள்ளிக் குதித்துக் கூத்தாடுகின்றது. ஏன்? அங்கே என் காதலி தோன்றுகிறாள்; கவிதை அணங்கின் புன்முறுவல் அவற்றிலே தவழ்கின்றது.

எழில் நிறைந்த பொருள்களெல்லாம் எனக்கு என்றும் இன்பம் தருகின்றன. இந்த எழில் எங்கே பிறக்கின்றது? உண்மை விளங்கும் இடத்திலே, சீலம் களிநடம் புரிகின்ற இடத்திலே, எழில் கோயில் கொண்டிருக்கின்றது. இயற்கை அமைப்பிலும், உருவத் தோற்றத்திலும் அழகுண்டு; ஆனால் உண்மையிலும், சீலத்திலும் பிறக்கின்ற அழகு அதை விடச் சாலச் சிறந்ததாகும். சனகனின் மகளாக வந்த சீதையின் மேனியழகு ஒப்பற்றதுதான். ஆனால் அதை விடச் சிறந்தது அப்பிராட்டியின் குண நலத்தினாலும் கற்பின் மாட்சியாலும் வெளியான ஆன்மிக அழகாகும்.

வடிவழகும், வாய்மை அழகும், சில அழகும், கவிதைத் தேவியின் உயிர், அவற்றைக் களைந்து விட்டால் அவள் பிணமாய்விடுகிறாள். அவளுக்கு எத்தனையோ அணிகளைக் கொண்டு ஒப்பனை செய்-