பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

“ஜின்கா, பலே பலே! பேஷ்டா! நீ தங்கமணிக்குச் சரியான ஜோடி” என்று சுந்தரம் குதூகலத்தோடு ஜின்காவைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே நடந்தான்.

“இந்தக் குரங்கு தான் நம்மையெல்லாம் காப்பாற்றியது. அதைத் தினமும் நான் நினைத்துக் கும்பிடுவேன்” என்று தில்லை நாயகம் தழுதழுத்த குரலில் மிகுந்த அன்போடு சொன்னார்.

“அம்மாவிடம் சொல்லி நான் ஜின்காவிற்குப் பிடித்த பலகாரமெல்லாம் செய்து போடுவேன்” என்று கண்ணகி உற்சாகத்தோடு தெரிவித்தாள்.

“முதலில் நாம் அப்பாவைக் கண்டுபிடிக்க வேண்டும். அவரிடத்திலே இந்தக் கொல்லிமலைக்குள்ளனை ஒப்படைக்க வேண்டும். பிறகு, கூடல் பட்டணம் போய், அம்மாவைச் சந்திக்க வேண்டும். அப்புறந்தான் பலகாரத்தைப் பற்றியெல்லாம் நினைக்க வேண்டும். இப்போது வேகமாக நடவுங்கள்” என்று துரிதப்படுத்தினான் தங்கமணி.

“உன்னுடைய அவசரத்திலே கால் தடுக்கிவிடப் போகிறது. அப்படித் தடுக்கிவிட்டால் பிறகு எந்தக் காரியமும் செய்ய முடியாது. எலும்பைப் பொறுக்கி எடுக்க வேண்டிய காரியந்தான் செய்ய வேண்டி வரும்” என்று எச்சரித்தான் சுந்தரம். ஆனால், அவனும் வேகமாகத்தான் காலெடுத்து வைத்தான். கொஞ்சநேரத்தில் அவர்கள் தில்லைநாயகத்தின் சமையல் குகைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தக் குகையில் நுழையும்போதே குள்ளன் இங்கு எப்படித் திடீரென்று வந்தான்?” என்று யோசனையில் ஆழ்ந்தவாறே தங்கமணி கேட்டான்.

“அவன் நினைத்தால் வந்துவிடுவான். அதிலெல்லாம் அவன் பலே கெட்டிக்காரன்” என்று மருதாசலம் பதில் சொன்னான்.

“வஞ்சியாற்றின் வழியாக அவர் பரிசலில் வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த மலைக்குத் தெற்கில் உள்ள ஏரியில் பரிசல் போட்டு வந்திருக்கவேண்டும். இந்த இடத்திற்கு வர இந்த இரண்டு வழிகள் தாம் உண்டு. இரண்டும்