பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ஜின்காவைப் பிடித்து உதறித் தள்ளினான். அப்படி உதறித் தள்ளும்போது அவன் தள்ளாடித் தடுமாறினான். அவன் கால்கள் நடுங்கின. அவனால் நிற்கமுடியவில்லை. அப்படியே அவன் முன்னால் சாய்ந்து விழுந்தான். முன்னால் நீட்டிக் கொண்டிருந்த கல்லிலே அவன் நெற்றி படீரென்று மோதிற்று. நெற்றியிலிருந்தும் ரத்தம் பீரிட்டுப் பொங்கத் தொடங்கியது. அடிபட்ட அதிர்ச்சியால் அவன் மூர்ச்சையடைந்து குகைக்குள்ளே தொப்பென்று விழுந்தான்.

ஜின்கா உடனே குறுக்குச் சட்டத்தை நேராக நிமிர்த்தி, உட்குகையின் கதவைத் திறந்தது. தங்கமணி முதலியவர்கள் பெருமகிழ்ச்சியோடு வெளியே வந்தார்கள். மருதாசலத்திற்கும், தில்லைநாயகத்திற்கும் அப்போதும் அச்சம் நீங்கவில்லை. கொல்லிமலைக் குள்ளன் கைகால்களை அசைக்காமல் கட்டைபோலக் கிடப்பதை லாந்தர் வெளிச்சத்தில் பார்த்தபிறகுதான் அவர்களுக்குக் கொஞ்சம் துணிச்சல் உண்டாயிற்று.

தங்கமணி எல்லாரையும் வெளியே வருமாறு சமிக்ஞை செய்தான். எல்லாரும் விரைவாக வெளியேறினர். வெளிக் குகையின் கதவைத் தங்கமணி நன்றாக மூடப்போனான். மருதாசலம் அவனுக்கு உதவியாக நின்று, கதவைக் குகையின் வாயிலில் ஒழுங்காகப் பொருத்தி வைத்தான். உடனே தங்கமணி அந்தக் குறுக்குச் சட்டத்தைக் குகையின் வாயிலில் உள்ள பாறைகளில் நன்றாகப் பொருந்தும்படி குறுக்காகத் திருப்பி வைத்தான். “இனி உள்ளேயிருந்து கதவைத் திறக்கவே முடியாது. நம்மையெல்லாம் சிறைப்பிடிக்க நினைத்த அந்தத் திருடன் உள்ளேயே கிடக்கட்டும். இனிமேல் நாம் அதிவிரைவாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். செல்லுங்கள்” என்று அவன் மற்றவர்களை நோக்கிக் கூறினான். அவர்கள் வந்த வழியாகவே திரும்பிச் செல்லலாயினர்.

மருதாசலம் நடந்தான். அவனுக்குப் பின்னால் தங்கமணியும், சுந்தரமும் சென்றனர். கண்ணகியின் கையைப் பிடித்தவாறு தில்லைநாயகம் கடைசியில் வந்தான். மூங்கிற் குச்சிகளைப் பழையபடி தரையில் ஊன்றிக்கொண்டு எல்லோரும் நடந்தனர். ஜின்கா இப்பொழுது தங்கமணியின் தோள்மேல் ஏறிக்கொண்டது.