பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வாயெடுத்தான். அதற்குள்ளே கண்ணகி தொடங்கிவிட்டாள். "எனக்குத்தான் யாருமே நீந்தக் கற்றுக் கொடுப்பதில்லை போன கோடை விடுமுறையிலிருந்து கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது."

"அம்மாவிடம் முதலிலே நீ அனுமதி வாங்கு; பிறகு நான் கற்றுக் கொடுக்கிறேன்" என்றான் தங்கமணி.

"கண்ணகி, உனக்குத்தான் தண்ணீரைக் கண்டாலே சளிப் பிடிக்குமே! அத்தை நிச்சயம் அனுமதி கொடுக்கமாட்டார்கள். முதலில் நீ நீந்தப் பழகிக்கொள்; அப்புறம் தண்ணீரில் இறங்கலாம்" என்று நகைத்தான் சுந்தரம்.

"இந்த விடுமுறையிலே எங்காவது ஆற்றுப்பக்கம் போனால் நன்றாக இருக்கும். ஆற்று மணலிலே விளையாடுவதும், ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்துவதும் ஒரு குதூகலமாக இருக்கும்" என்று தங்கமணி தனது விருப்பத்தை தெரிவித்தான்.

மற்ற இருவரும் உற்சாகமாக அதை ஆமோதித்தார்கள் "எனக்குக்கூட ஒவ்வொரு விடுமுறையிலும் சென்னைக்கே வந்து அலுத்துப்போய்விட்டது. மதுரையை விட்டால் சென்னை; சென்னையை விட்டால் மதுரை. எங்காவது ஆற்றுப் பக்கத்திலே ஒரு கிராமத்திற்குப் போய்க் கொஞ்ச நாள் தங்கி வந்தால் நன்றாக இருக்கும். உன்னுடைய ஜின்காவிற்கும் மரங்களில் ஏறி விளையாடுவதற்கு ஒரு நல்ல சமயம் கிடைக்கும்.

"ஆமாம், அண்ணா! அதுதான் எனக்கும் ஆசையா இருக்கிறது. ஆனால், அப்பா என்ன சொல்லுவாரோ?" என்றாள் கண்ணகி.

"கண்ணகி, கிராமத்துப் புளியந்தோப்பிலே இரட்டைவால் பேயிருக்கும். தெரியுமா ?" --இப்படிச் சுந்தரம் பேயை பற்றிப் பேசத் தொடங்கினான்.

"பேயா! ஐயோ, நான் வரமாட்டேன்."

"இல்லை கண்ணகி, இவன் தான் இரட்டைவால் பேய் வேறே பேயெல்லாம் கிடையாது. அதெல்லாம் கட்டுக்கதை பயப்படாதே" என்று தங்கமணி தன் தங்கைக்குத் தைரியம் கூறினான்.