பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1௦6

காட்டு வழிதனிலே


‘சாஸ்திரம் மனிதனால் எழுதப்பட்டது. ஆதலால், இன்னும் நிறைவு பெறவில்லை. தெய்விக விதிகளைக் கூடியவரை பின்பற்றியே சாஸ்திரக் காரர்கள் எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், கால தேச வர்த்தமானங்கள் மாறுபடுகின்றன. தெய்வ விதிகளைப்பற்றிய புதிய வித்தைகள் வழங்கப்படுகின்றன. அப்போது சாஸ்திர விதிகளை மாற்றுதல் அவசியமாகிறது.

தர்ம சாஸ்திரத்தை எடுங்கள்: பஞ்சபாண்டவர் காலத்தில் ஒரு ஸ்தீரீ பல புருஷர்களை விவாகம் செய்து கொள்ளலாம். வேதவியாசர் காலத்தில் தமையன் பிள்ளையில்லாமல் இறந்து போனால் தம்பி அவனுக்குச் சந்ததி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

“சாஸ்திரங்களை யெல்லாம் காலத்துக்குத் தகுந்த படி மாற்றிக்கொண்டு போகிறோம்.” காலத்திற் கேற்றபடி மாறுதல்கள் ஏற்படாத சமூகம் அழிந்து போகுமென்று பாரதியார் எச்சரிக்கை செய்கிறார்,

"நமது ஜன சமூகத்தில் மாறுதல்கள் நடக்க வேண்டும். மாறுதலே உயிர்த் திறமையின் முதற் குறியாகும். மேன்மேலும் செளகரியத்தை விரும்பித் தானகவே புதிய புதிய மாறுதல்கள் செய்து கொள்ளாத ஐந்துவை இயற்கைத் தெய்வம் வலிய வந்து கீழ் நிலைமைக்கு மாற்றுகிறது. புராதன ஆசாரங்களில் நல்லதைக் கடைப்பிடித்துக் கெட்டதை நீக்கிவிட வேண்டும். புராண மித்யேவ நஸாது ஸர்வம். பழமை என்ற ஒரே காரணத்தால் எல்லாம் நல்லதாய்விட்டது.”