பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

பொம்மைக்கூத்திற்குப் போனபோது வீர்சீங் இவர்களை அன்போடு வரவேற்று, வசதியான இடத்திலே அமரச் செய்தார். “அப்பா வரமாட்டாங்கோ?” என்று அவர் கொச்சைத் தமிழிலே கேட்டார். "அப்பாவுக்கு இந்தத் தேர்விலே மாணவர்கள் எழுதிய விடைகளைத் திருத்தும் வேலை இருக்கிறது என்றாள் கண்ணகி. வீர்சிங் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பொம்மைக்கூத்தைத் தொடங்குவதற்குப் போய்விட்டார்.

"கண்ணகி, அப்பா நம்மிடம் சொல்லியிருப்பதை மறந்து விட்டாயா? அவர் செய்கின்ற வேலையை யாரிடமும் சொல்லக் கூடாது" என்று தங்கமணி கடிந்துகொண்டான்.

"இவரிடம் சொன்னால் என்ன? இவர் நம்ம ஊர்க்காரர் அல்லவே!" என்றாள் கண்ணகி.

"இதே பழக்கந்தான் எல்லாரிடமும் வரும். அதனால் தான் சொல்லக்கூடாது" என்று தங்கமணி எச்சரிக்கை செய்தான்.

இதுவரை சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரம், ஜின்காவின் முதுகிலே தட்டிக்கொடுத்து. “ஜின்கா, அதோ மேடையிலே பார், உன்னைப்போல ஒரு பொம்மைக்குரங்கு ஆட்டம் போட வந்திருக்கிறது என்று உற்சாகமாகக் கூவினான்.

பேச்சை விட்டுவிட்டு எல்லாரும் பொம்மைக்கூத்தின் தொடக்கக் காட்சியிலேயே கவனம் செலுத்தினார்கள். ஜின்காவிற்கு ஒரே உற்சாகம். பொம்மைக்குரங்கு ஆடுவதையும், மற்ற பொம்மைகள் ஆடுவதையும் பார்த்து அதுவும் ஆடத் தொடங்கிவிட்டது.

எல்லாருக்கும் பொம்மைக்கூத்து மிகவும் பிடித்திருந்தது. வீட்டிற்குத் திரும்பிய பிறகும் உறங்கச் செல்லாமல் மூன்று பேரும் அந்தக் கூத்தைப் பற்றியே உற்சாகத்தோடு வெகு நேரம்வரை பேசிக்கொண்டிருந்தார்கள். ஜின்கா அந்த