பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

காட்டு வழிதனிலே


வஞ்சிப்பர பெரும்பாலும் மறைந்து விட்டது என்று கூறலாம். இந்த யாப்பு வகை இன்று யாரையும் கவருவதாகத் தெரிவதில்லை. மேலே எடுத்துக் காட்டிய பாடல் மிகச் சிறந்த வஞ்சிப்பாவாக அமைந்திருக்கிறது. கம்பன் பாட்டிலே உள்ள உருவகம் ஒன்றும் இதிற் கிடையாது. செழுமை மிக்க மருத நிலத்தில் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு செயலே இப்பாட்டு யாதொரு வகையான அணியுமின்றிச் சொல்லுகிறது.

அதனுடைய விளைவுதான் என்ன? பச்சைப்பசேலென்று பரந்த வயலிடமும், அதில் ஆங்காங்கு கரும்பின் தோற்றமும், தடாகங்களின் மிளிர்வும், மரஞ் செறிந்த சோலைகளின் கரும்பசுமையும் நம் கண் முன்பு பளிச்சென்று தோன்றுகின்றன. கைதேர்ந்த ஒவியன் ஒருவன் துTரிகையை எடுத்து வண்ணத்தில் தோய்த்து இரண்டு மூன்று வீச்சிலே ஒரு இயற்கைக் காட்சியை நம் கண் முன்பு நிறுத்தி விடுவது போல இந்தக் கவிஞன் செய்து விடுகிறான். அந்த ஒவியன் செய்ய முடியாத இன்னும் பல காரியங்களையும் இவன் செய்து விடுகிறான் என்பதையும் உணரும்போது நமது இன்பம் மேலும் பெருகுகின்றது.

எருமை மாட்டிற்கே அந்த வள்ளலின் ஊரிலே இத்தனை சுகங் கிடைக்கும்போது அழகிய கவிதைகளே உண்டாக்கும் கவிஞனுக்குச் சிறப்புக் கிடைப்பதைப் பற்றி ஐயப்பட வேண்டியதே இல்லை. அதுவும் பாட்டிலே தொனிக்கின்றது.