பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

விதமாக மகிழ்ச்சிக் குரல் எழுப்பி ஆராவரம் செய்துகொண்டே பரிசலுக்குள் தாவிக் குதித்தது. தங்கமணி ஜின்காவின் உடம்பிலிருந்து வழியும் தண்ணீரிலே தனது சொக்காயெல்லாம் நனைவதைக்கூடப் பொருட்படுத்தாமல் அதைத் தன் உடம்போடு சேர்த்துக் கட்டி அணைத்துக்கொண்டான். ஜின்காவும் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளியிட்டது.

பிறகு, ஜின்கா தன் கன்னத்தில் அடக்கிவைத்திருந்த உருண்டைச் சிமிழை வெளியே எடுத்து, தங்கமணியிடம் கொடுத்தது.

“இதோ, அப்பா கடிதம்” என்று கூவினாள் கண்ணகி. “மாமா கடிதமா, அத்தை கடிதமா?" என்று சுந்தரம் சந்தேகத்தோடு கேட்டான்.

"யார் கடிதமென்றாலும் படிப்பதற்கு இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வர வேண்டும். அதற்குள்ளே கரையைச் சேருவதற்கு முயற்சி பண்ணுவோம்" என்று தங்கமணி கூறிவிட்டு, ஜின்காவைத் தட்டிக் கொடுத்தான்.

"ஜின்கா, நீ ரொம்ப களைத்துப் போயிருக்கிறாய், இருந்தாலும் உன்னுடைய உதவிதான் இப்பொழுது முதலில்