பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

மணிக்கு உற்சாகம் உண்டாக்க முயன்றது. இந்தச் சமயத்திலே தங்கமணியின் தங்கை கண்ணகி உள்ளே வந்து, "அண்ணா, அம்மா சாப்பிடக் கூப்பிடுகிறார்கள்" என்று தெரிவித்தாள். அவளுக்கும் பொம்மைக்கூத்திற்குப் போக முடியவில்லையே என்று ஏக்கந்தான். தங்கமணி எழுந்து தங்கையைப் பின்தொடர்ந்து சென்றான். ஜின்கா அவன் தோளின்மேல் ஏறிக்கொள்ள முயலாமல் மெதுவாகப் பக்கத்தில் நடந்து சென்றது.

சாப்பிடும்போது சிறுவர்கள் வழக்கத்திற்கு மாறாக மௌனம் சாதித்தார்கள். சுந்தரம் எப்பொழுதுமே நகைச்சுவையோடு பேசும் இயல்பு உடையவன். மேலும், அவனுக்கு மாமன் வீட்டிலே செல்லம் அதிகம். அவன் பெற்றோர்கள் மதுரையில் வாழ்ந்தனர். அங்கிருந்து கோடை விடுமுறைக்காகச் சென்னை வந்திருந்தான். அவன்கூட அன்றிரவு ஒன்றும் பேசாமல் உணவருந்திக்கொண்டிருந்தான். ஜின்கா தனது இயற்கையான சிறு குறும்புகளை விட்டுவிட்டுத் தட்டத்தில் அதற்கென்று தனியாக வைத்திருந்த பழத்தையும் வேர்க்கடலையுைம் தன் வாயில் போட்டுக் கன்னத்தில் அடக்கிக் கொண்டிருந்தது. கண்ணகியின் முகத்தில் புன்சிரிப்பைக்கூடக் காணமுடியவில்லை.

இவர்களுடைய சோர்வையும் ஏமாற்றத்தையும் வடிவேல் உணர்ந்துகொண்டார். "நாளைக்குப் பொம்மைக்கூத்திற்கு நான்கு டிக்கெட் வாங்கி, வருகிறேன். அம்மாவும் நீங்களும் போகலாம்" என்று அவர் கூறினார். சிறுவர்கள் முகத்தில் சிரிப்புப் பொங்க ஆரம்பித்துவிட்டது. "நீங்களும் வாங்கப்பா" என்று கண்ணகி கொஞ்சினாள்.

"நான் வர முடியாது, கண்ணகி. எனக்கு நிறைய வேலை இருக்கிறது" என்றார் வடிவேல்.