பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
93

லாம் அவன் கிடைக்காவிட்டாலும் கடைசியில் அந்தச் சிலைகளையாவது எடுத்துச் சென்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.

இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும்போதே வடிவேலுவுக்கு வேறொரு வகையான எண்ணமும் பிறக்கலாயிற்று. ஒரு வேளை, பரிசலில் வந்த போலீசாரைக் குள்ளனின் ஆள்கள் பிடித்திருந்தால் ...... அப்பொழுது என்ன நடந்திருக்கும்? இவ்வாறு தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார். போலீசார் துப்பாக்கியுடன்தான் வந்திருப்பார்கன். அதனால் அவர்களைப் பிடித்திருப்பது நடைபெறக்கூடியதன்று. அப்படி அவர்களைப் பிடித்திருந்தாலும் குள்ளனின் ஆள்கள் அவர்களைத் தச்சுப் பட்டறைக்குத்தான் கொண்டு சென்றிருப்பார்கள். அப்பொழுது வள்ளிநாயகிக்கு ஒரு சேதியும் கிடைத்திருக்காது. போலீசாரையும் சந்திக்கமுடியாது. அவள் பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருப்பாள். அப்படிப் பார்க்கும்போதும் கூடல் பட்டணம் போய் வள்ளிநாயகியைச் சந்திப்பதே முதல் வேலையாகத் தோன்றிற்று. பிறகு, போலீஸ் இன்ஸ்பெக்டரையும் வேறு பல போலீசாரையும் அழைத்துக்கொண்டு வந்து தச்சுப் பட்டறைக்கு வரமுடியும். போலீசார் பிடிபட்டிருந்தால் அவர்களையும் விடுவிக்கலாம். பின்பு, இந்த இடத்திற்கு வந்து இங்கே குகைக்குள் அடைபட்டுக் கிடக்கும் குள்ளனின் ஆள்கள் ஐவரையும் கைது செய்யலாம். அதுவரை இவர்கள் குகைக்குள்ளேயே கிடக்கட்டும்.

இவ்வாறு முடிவு செய்துகொண்டு அந்த இடத்திலிருந்து கூடல் பட்டணத்திற்கு எப்படிப் போகலாம் என்பதைப்பற்றித் தில்லை நாயகத்தோடு கலந்து சிந்திக்கக் தொடங்கினார். "கூடல் பட்டணத்திற்கு எப்படிப் போகலாம்?" என்று அவர் திடீரென்று தில்லைநாயகத்தை வினவினார்.

இவ்வாறு பேராசிரியர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதும், திடீரென்று கேள்வி கேட்பதும் தங்கமணிக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவன் அதுவரையில் மெளனமாக இருந்தான். சுந்தரத்திற்கும், கண்ணகிக்குந்தான் இப்படி மெளனமாக இருப்பது தொல்லையாக இருந்தது. ஜின்காவிற்கும் அது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதற்கு நாவற்பழத்தின் மேலே ஆசை ஏற்பட்டுவிட்டது. கண்ணகி வரக் கொஞ்சம்