பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
94

விருப்பம் காட்டியிருந்தால் அது அவளை அழைத்துக்கொண்டு போயிருக்கும். ஆனால், அவள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். மேலும், தங்கமணி ஏதேதோ எண்ணிக் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. அதனால் முக்கியமான வேலை இருப்பதாக அது உணர்ந்துகொண்டது. அதனால் அது ஓரிடத்திலே படுத்துக்கொண்டது. சுந்தரம் அதனிடத்திலே வந்து அதைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.

இந்த நிலையில்தான் வடிவேல் திடீரென்று கேள்வி கேட்டார். தில்லைநாயகத்திற்கு என்ன பதிலளிப்பது என்று தோன்றவில்லை. அவர் சற்று திகைத்தார். அதைக் கண்டு வடிவேல் "தில்லைநாயகம், நாமெல்லோரும் உடனே கூடல் பட்டணம் போயாக வேண்டும். நூலேணிக்கும் கீழே ஆற்றின் கரையில் இரண்டு பரிசல்கள் இருப்பது எனக்குத் தெரியும். அவற்றைப் பயன்படுத்தி ஆற்று வழியாகவே கூடல் பட்டணம் போய்ச் சேரலாம். நீ ஒரு பரிசலையும், உன் மகன் மருதாசலம், ஒரு பரிசலையும் செலுத்த முடியும். ஆனால், அப்படிப் போகும் போது தச்சுப்பட்டறையில் உள்ள ஆள்களுக்குத் தெரியுமல்லவா ?" என்று கேட்டார்.

"ஆமாம், தச்சுப்பட்டறை ஆற்றின் கரையிலேயே உயரமான இடத்தில் இருக்கிறது. அங்கு இருப்பவர்களுக்கு ஆற்றில் செல்லும் பரிசல்கள் நன்றாகத் தெரியும்” என்று தில்லைநாயகம் பதிலளித்தார்.

"அதை நினைத்துத்தான் நான் வேறு வழி இருக்கிறதா என்று கேட்கிறேன்.”

"மலைக்கு மேற்புறத்திலே இறங்கி, அங்குள்ள ஏரி வழியாகப் பரிசலில் போகலாம். நான் வலிக்கும் பரிசலும் அங்கு இருக்கிறது.”

"எரி வழியாகப் போனால் தச்சுப்பட்டறையில் உள்ளவர் கண்ணிலும் படமாட்டோம். அதோடு அந்தப் பட்டறைப் பக்கம் போகாமலேயே கூடல் பட்டணம் போகும் வழியிருக்கிறது. அந்த வழியில் இரண்டு மைல் நடந்தால் கூடல் பட்டணம் போய்விடலாம்" என்று மருதாசலம் உற்சாகத்தோடு கூறினான்.