பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாண்டியன் நெடுஞ்செழியன்
1. கிளி பறந்தது

“இவ்வளவு பெரிய நாட்டை விதி இந்தச் சின்னஞ் சிறிய பிள்ளையின் கையில் ஒப்படைத்திருக்கிறது. என்ன ஆகுமோ? நல்ல மந்திரிகள் அமைந்து அரசியல் ஒழுங்காக நடைபெற வேண்டும். இறைவன் திருவருள் துணையிருந்து காக்க வேண்டும்” என்றார் முதியவர்.

அவரைவிடச் சற்றே இளையவர் ஒருவர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்; “ஆண்டில் இளையவன் என்று எண்ணி அஞ்சவேண்டிய தில்லை. சிங்கக்குட்டி என்றால் வீரம் இராதா? பாண்டிய மரபில் தோன்றிய யாரும் கோழையான தில்லை. மதுரை மாநகரம் என்று தோன்றியதோ, அன்றுமுதல் திருமகளின் அரசிருக்கையாகத் திகழ்கிறது. பாண்டிய மன்னர்களும் குலப் பெருமை வீண் போகாமல் கோலோச்சி வருகிறார்கள்” என்றார்.