பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

சங்க காலத்து இலக்கியங்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் பாண்டிய மன்னர்களில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இளமையிலே அரசாளப் புகுந்து பல போர்களில் வெற்றி பெற்று வண்மையிலும் திண்மையிலும் சிறந்து நின்றான். அவன் இயல்புகளைப் பத்துப் பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை என்ற இரண்டு நூல்களும் எடுத்துரைக்கின்றன. அவன் வரலாற்றோடு தொடர்புடைய பாடல்கள் பல புறநானூற்றில் இருக்கின்றன. அவனே பாடிய செய்யுள் ஒன்றும் அத் தொகை நூலில் இடம் பெற்றிருக்கிறது.

அவனுடைய வரலாறே இது. சங்க நூல்களில் அங்கங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளைத் தொகுத்து அடைவு தேர்ந்து ஒட்ட வைத்துக் கற்பனையால் உருவாக்கியிருக்கிறேன். உரையாடல்களில் என் கற்பனையைப் பயன்படுத்தியிருக்கிறேன். புலவர்களின் பாடல்களில் உள்ள பொருளே உரைநடையில் இணைத்திருக்கிறேன். அவற்றிற்குரிய பாடல்கள் இன்னவென்பது அடிக்குறிப்பினால் தெரியவரும்.

நெடுநல் வாடையின் உள்ளுறையை உரைநடையில் அமைத்திருக்கிறேன். மதுரைக் காஞ்சியில் உள்ளவற்றில் பெரும் பகுதியை அப்படியப்படியே வைத்தும் சிலவற்றைச் சுருக்கியும் காட்டியிருக்கிறேன். அக்காலத்து வாழ்க்கை முறையை உணர இப் பகுதிகள் கருவியாக இருக்கும்.

முன்பு எழுதிய வரலாறுகளேப் போல, இதைப் படித்து முடித்தால் வரலாற்றுத் தலைவனுடைய உருவம் உள்ளத்தே ஒருவாறு புலப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடே இதனையும் எழுதியிருக்கிறேன்.

பழம்பெரு மன்னர்களையும் புலவர்களேயும் இலக்கியத்துக்குள் நுழைந்து அறிந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மாண்வர்களுக்கும் இத்தகைய நூல்கள் அவர்களின் பெருமையை உணர்ந்துகொள்ள உதவும் என்பது என் நம்பிக்கை.

“காந்தமலை”
கி. வா. ஜகந்நாதன்
கல்யாண நகர் - மயிலை
15—10—56