பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளி பறந்தது

13


சிறைப்பட்ட சேரனுடன் வெற்றி மிடுக்கோடு படைத் தலைவர் நெடுஞ்செழியனை அணுகினார். அவனுடைய பெருந்தன்மையை என்னவென்று சொல்வது! சிங்காதனத்திலிருந்து எழுந்து வந்து எதிர் கொண்டழைத்தான் அந்த வீரனை. “இந்தச் சேரர் பெருமானை நல்ல மாளிகையில் ஊணுக்கும் உறக்கத்துக்கும் இடையூறு வராமல் பாதுகாத்து வர வேண்டும்” என்று அவன் கூறியபோது யாவரும் அவனுடைய பண்பை வியந்தனர்.

பெரிய அரசனாகிய சேரனைக் குற்றம் செய்தவரை இடும் சிறையிலா இடுவார்கள்? பெரிய மாளிகையில் சிறை வைத்தார்கள். வேண்டிய பொருளை வேண்டிய போதெல்லாம் அளிக்கத் திட்டம் செய்தார்கள். அவன் வெளியே தன் விருப்பப்படி செல்ல இயலாதேயன்றி வேறு வகையில் அவனுக்கு ஒரு குறையும் இல்லை. இசை பாடும் மகளிரும் கூத்தியற்றும் விறலியரும் அவனுக்கு முன் பாடியும் ஆடியும் அவனை மகிழ்வித்தனர்; சுவைமிக்க உணவு அளித்தனர்.

சுதந்தரம் இல்லாத வாழ்வில் அமுதமே கிடைத்தாலும் மானமுடையவர்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வார்களா? மாந்தரஞ்சேரலிரும்பொறை இப்போதுள்ள தன் நிலையை நினைந்து பார்த்தான். அறிவற்ற அமைச்சரின் வார்த்தைக்குச் செவி கொடுத்த தீமை இப்படி விளைகிறதென்று எண்ணி ஏங்கினான். தன் அருமைச் சேர நாட்டையும் நகரத்தையும் மனைவி மக்களையும் விட்டுப் பிரிந்து வாழும் வாழ்க்கையை நரக வாழ்க்கையாக உணர்ந்து தவித்தான். பாட்டும் கூத்தும் அவனுக்கு அப்போது இனிக்குமா? கூட்

பா-2