பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13 சூழ் நிலை

பாரம்பரியமாகக் குழந்தைக்கு அமையும் தன்மைகள், திறமைகள் முதலியவற்றைப்பற்றி முன்பே சுருக்கமாகக் கூறினேன். தாயும் தந்தையும் எவ்வாறு அவற்றிற்கு உதவுகிறார்கள் என்பதையும் கண்டோம். ஆனால் அவை யெல்லாம் வளர்ந்தோங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை வேண்டும். இல்லாவிட்டால் அவை நசித்துப் போகும்; அல்லது முழு வளர்ச்சி பெறாமல் நின்றுவிடும். ஆதலால் குழ்நிலையைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சூழ்நிலை என்ற சொல்லால் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை முதலில் தீர்மானம் செய்துகொள்ளுவது அவசியம். சூழ்நிலை என்கிறபோது மனத் தத்துவர்கள் சுற்றியிருக்கும் இடம், சுற்றியிருக்கும் மக்கள் ஆகியவற்றை மட்டும் குறிப்பிடுவதில்லை. அவர்கள் அச்சொல்லுக்கு மிக விரிவான பொருள் கூறுகிறார்கள். பாரம்பரியத்தால் அமையாத மற்ற எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும் அநுபவங்களையும், தொடர்புகளையும், நிகழ்ச்சிகளையும் சூழ்நிலை என்ற சொல்லாலேயே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சில மனத்தத்துவர்கள் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவ்வாறு பாரம்பரியமாக எவ்விதமான திறமையும் அமைவதில்லை என்றுகூடச் சிலர் துணிந்து கூற முன்வருகிறார்கள். அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையல்ல என்றாலும் அவர்கள் அவ்வாறு கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.