பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒடிவிளையாடு பாப்பா

31

குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும்போது இன்னும் எத்தனையோ அவசியமான அனுபவங்கள் குழந்தைக்குக் கிடைக்கின்றன. சமூகத்திலே மக்களோடு கலந்து பிற் காலத்தில் வாழ வேண்டிய குழந்தைக்கு இவையெல்லாம் தேவை. பிறரோடு சேர்ந்து வாழத் தெரிந்துகொள்ளுவதே ஒரு கலை. அதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொரு வரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

சுயநலத்தையே எண்ணிக் கொண்டிருப்பவர்களே நாம் போற்ற மாட்டோம். பச்சைக் குழந்தையைப் போலச் சுய நலத்திலே யாரும் அவ்வளவு பற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதற்குத் தனது வாழ்க்கையும் சுகமும் தான் பெரிது. அம்மா அதையே கவனிக்க வேண்டும்; அதற்கு வேண்டியதையெல்லாம் உடனுக்குடனே எல்லோரும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்குத் திருப்தி கிடையாது. வேறு குழந்தையொன்றை அம்மா கையிலெடுத்து மடியில் வைத்துக் கொண்டால் இதற்கு ஒரே ஆத்திரம் பொங்கிவிடும். விளையாட்டுப் பொம்மையை அம்மா வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது. இப்படியெல்லாம் தனது இன்பத்தையே நாடிக் கொண்டிருக்கும் குழந்தை மற்ற குழந்தைகளோடு சேர்ந்து பழகும்போதும் விளையாடும் போதும்தான் மற்றவர்களுடைய இன்பத்தையும், செளகரியத்தையும் கவனிக்க வேண்டும் என்பதைச் சிறிது சிறிதாக உணர்கின்றது. மற்றக் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும்போது சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, முன்னின்று நடத்தும் திறமை, தலைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தன்மையெல்லாம் இயல்பாக அமைகின்றன.

தண்ணீரும், மண்ணும், மணலும் குழந்தைக்கு இயற்கையிலேயே எளிதாகக் கிடைக்கும் விளையாட்டுப் பொருள்கள். அவைகளைக் கூடாதென்று நாம் தடுப்பது சரியல்ல.