பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது நோக்கம்

5

வாழ்க்கையோடு ஒட்டிய முறையிலும் எழுத வேண்டு மென்பது என்னுடைய ஆவல். அதனால் குழந்தையின் உள்ள வளர்ச்சியைப் பற்றி விஞ்ஞான முறையில் விஷயங்களையும் அத்தியாயங்களையும் கோவைப்படுத்த கான் விரும்பவில்லை. முக்கியமாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவற்றைப் பற்றி மட்டும் எளிய முறையில் விளக்க இங்கு முயலுவேன்.

பிறக்கும்போதே குழந்தை பாரம்பரியமாகச் சில தன்மைகளைக் கொண்டுள்ளது. அவை சூழ்நிலையால் மலர்கின்றன; அல்லது அவற்றிற்கேற்ற வளம் கிடைக்காமற் போனால் மங்கி மறைந்துபோகின்றன. பாரம்பரியமும் சூழ்நிலையும் குழந்தையின் மலர்ச்சியில் முக்கிய ஸ்தானம் பெறுகின்றன. இவை இரண்டுமே குழந்தையை உருவாக்குகின்றன என்றே கூறிவிடலாம். ஆதலால் குழந்தையின் மன இயல்பை அறிந்து கொள்ளுவதற்கு முன்பு பாரம்பரியம் என்றால் என்ன, அது எவ்வாறு அமைகின்றது, அதற்கு யார் யார் பொறுப்பு என்பனவற்றைப் பற்றியெல்லாம் ஓரளவு அறிந்துகொள்ளுவது அவசியம். அதை அடுத்த பாகத்தில் விவரிப்பேன். சூழ்நிலையைப் பற்றிய விவரத்தையும் பின்னால் ஏற்ற இடத்தில் தெளிவுபடுத்துவேன்.