பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

"குழந்தையிலிருந்தே அடித்து மிரட்டி வைக்க வேணும். அப்போது செல்லம் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் பெரியவனான் பிறகு அடித்தால் இப்படித்தான் ஓடுவான்" என்று காரணங் கண்டுபிடித்தார் வேறோரு பிரயாணி.

"அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்று இன்னொருவர் பழமொழியில் பேசினார்.

அவர்கள் பேச்சைக் கேட்கக் கேட்க என்னையறியாது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பலர் இவர்களைப் போலத்தான் பொதுவாக நம்பிக்கை வைத்திருக்கிருர்கள். அடித்து வளர்க்காத பிள்ளையும் பிடித்து வளர்க்காத மீசையும் உருப்படாவாம்.

பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளிடத்தில் அளவுகடந்த பிரியம் இருக்கிறது. இருந்தாலும் குழந்தைகளை அடிக்கிறார்கள். அப்படிச் செய்தால்தான் குழந்தைகள் திருந்தி, நல்ல வழியில் நடக்கக் கற்றுக்கொள்ளும் என்பது அவர்களுடைய எண்ணம். இது முற்றிலும் சரியல்ல. நல்ல முறையில் வளர்ப்பதற்குக் குழந்தையை அடிக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்பதனாலும் மிரட்டுவதாலும் குழந்தைக்கு நன்மையை விடத் தீமையே அதிகம் விளைகின்றது என்று குழந்தையின் மனத்தை ஆராய்ந்தறிந்த மனத் தத்துவர்கள் கூறுகிறார்கள்.

"சில சமயங்களிலே குழந்தைகள் பிடிவாதம் செய்கின்றனவே, அப்பொழுது அடிக்காமல் என்ன செய்வது? எவ்வளவு அன்பாகவும் பொறுமையாகவும் பேசினாலும் கேட்பதில்லை. அந்தச் சமயத்திலே என்ன செய்வது?" என்று சில பெற்றோர்கள் கேட்கிறார்கள்.

"வாயில் சொல்லிவிட்டுப் போகிறவர்களுக்கென்ன? குழந்தையை வளர்த்துப் பார்த்தால் கஷ்டம் தெரியும். என்