பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 13

முன்னோடியாக விளங்குபவர் கவிஞர், எழுத்தாளர் குலோத்துங்கன் ஆவார். அறிவியல் மேதை வா. செ. குழந்தைசாமியின் புனை பெயர்தான் குலோத்துங்கன் என்பது. நமது வாழ்க்கையில் மிகவும் அருமையாக – உயர்வானதாகக் காக்கப்பெற வேண்டியது, காலம்! இன்று, நம் மக்களிடத்தில் காலத்தின் அருமைப்பாடு உணரப் பெறவில்லை! இன்று நம்நாட்டில் மலிவாகச் செலவழிக்கப்படுவது – களவாடல் செய்யப்படுவது காலமேயாம்! கவிஞர் குலோத்துங்கனின், காலத்தின் அருமையை உணர்த்தும் கவிதை அருமையானது. இந்த காலத்தில் வாழும் நாள்கள் சில. இந்தச் சிறிய கால எல்லைக்குள் அறிந்துணர வேண்டிய உண்மைகள் பல உள்ளன. சலிப்பின்றி உழைக்கின்ற வேளையில் வயிறு உணவு கேட்டுத் தொந்தரவு செய்கிறதாம்! வயிற்றுக்கு உணவு தேடுவதா என் தொழில்? குலோத்துங்கன் கவிதையைக் கேளுங்கள்!

“கால மோவிரை கின்ற தோர்சிறு
கணமும் மீளுமோ? ஏழை இப்பெரும்
ஞாலம் மீதுறை நாட்க ளோ, சில!
நான் தெளிந்திட வேண்டும் உண்மைகள்
சால வுள்ளன! ஓய்வ றிந்திலன்
சலிப்பி றந்துழைக் கின்ற வேளையில்
ஓலம் இட்டெனை உணவு தேடென
உரற்று வாய்வயி றே!இஃ தென்தொழில்?”

(குலோத்துங்கன் கவிதைகள் பக். 30)


காலத்தைக் காத்துப் பயன்படுத்துவோம்! வாரீர்! காலத்தை முறையாகப் பயன்படுத்துவோர் வாழும் நாடு வளரும்!