பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மகரிஷிகள், ஞானிகள் எல்லாம் காட்டுக்குப் போய், காட்டோடு அவர்கள் போயிருந்தால் அவர்களுக்கு என்ன பெருமை? உலகத்தைத் துறந்துபோன ஞானிகள் தங்கள் ஞானம் வாழனும்னா மனுஷ சமூகத்துக்குத் திரும்பி வந்து, அவர்கள் மத்தியில்தான் வாழனும். காட்டுக்குப் போனதாலே மட்டும் இல்லே; திரும்பி வந்ததனாலேதான் அவர்களுக்குப் பெருமை இருக்கு” என்ற ஜெயகாந்தனின் கோவிந்தன் கூறுவது நினைந்து போற்றத்தக்கது!

அடுத்து, மனசாட்சி! கவியரசு கண்ணதாசன்

      கண்ணில் வருவது காட்சி! அந்தக்
      காட்சிக்கு சாட்சி மனம்!
      காட்சியை மறந்தன கண்கள் - மனச்
      சாட்சியை மறைத்தது உள்ளம்!

என்று அழகுறப் பாடுவார்.

ஒரு பொருளை ஒருவன் பார்க்கிற பார்வையில், எந்த நோக்கத்தோடு அவன் பார்க்கிறான் என்பது யாருக்குத் தெரியும்? பார்ப்பவன் மனச்சாட்சியே இதற்குச் சாட்சி! அவனோ, அவனுடைய மனச்சாட்சியை மூடி மறைத்து விடுகின்றான். மனச்சாட்சி என்பதைப் பற்றி மாவீரன் மாஜினி சொல்லும் செய்திகள் கவனத்திற்கு உரியன.

இன்று நம்மில் பலர், எடுத்ததற்கெல்லாம் “மனச் சாட்சிப்படி நான் பொய் சொல்லவில்லை” என்று கூறுவர். அவருடைய மனம் நடுநிலையில் நின்றதா? நீதியைச் சார்ந்திருந்ததா? என்றெல்லாம் ஆய்வு செய்து அறிவது கடினம்.