பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



விருக்ஷம் தனது சுபாவத்தை காட்டியே வருகிறது. நாம் எப்படி நடத்திய போதிலும் அது கவனிக்கிறதும் இல்லை; கவலைப்படுவதும் இல்லை. கிளைகளை வெட்டினாலும் கிளைத்து வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும் சுபாவத்தை விடுகிறதில்லை. இதுவே, பக்தியின் இலக்கணம்.

இந்த மாதிரிப் பக்தியின் வளர்ச்சி நாட்டுக்கு நல்லது. இன்று பக்தி, யாத்திரைகளாகவும் திருவிழாக்களாகவும் தண்ணிர் தெளிக்கும் விழாக்களாகவுமே (கும்பாபிஷேகம்) அமைந்து வருகின்றன. பாரதியின் தடத்தில் பக்தி நெறி வளர்ந்தால் பாரதம் சிறக்கும்.

நம்முடைய தேசமானது இன்று பல அல்லல்களுக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் நாம் வாளா இருக்கலாமா? “கிராமத்திற்குக் கஷ்டம் வந்தால் குலத்தையும் விட்டுவிடு” என்று சொல்லியிருக்கவில்லையா?

நமது பாரத ஜாதிக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரு பிரிவு இது நீதியா? இந்தத் தாழ்த்தப் பட்டவர்களை நாமே நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டாமா?

தாழ்ந்த எரு, குப்பைகளைத் தள்ளிவிட்டால் நல்ல புஷ்பங்களும் பயிர்களும் விளையுமா? கரியைத் தள்ளி விட்டால் நெருப்பு உண்டாகுமா?

ஆதலால், பெற்றோர்களே! பாரதியின் தடத்தில் உங்கள் பிள்ளைகள் யாவரையும் தேசத்திற்கு நன்மை செய்ய அனுப்புங்கள்!