பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 33

சமூகத்தைப் பாதுகாப்பது என்றால் என்ன? கழனியில் பயிரைப் பாதுகாப்பது போன்றது. அது. கழனியில் பயிரைப் பாதுகாப்பது என்றால் என்ன? பயன் தரும் பயிர்களை, பயன்தரா களைகள் அழித்து விடாமல் பாதுகாப்பதுதானே, பயிர்ப் பாதுகாப்பு? அதுபோல, சமூகத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் தடையாக இருக்கிற சமூகத் தீய சக்திகளை எதிர்க்க வேண்டும். களையெடுக்காமல் பயிர் வளர்க்க முடியாது. சமூகத்தின் தீய சக்திகளை வெற்றி கொள்ளாமல் நல்ல மனித சமூகத்தைக் காண முடியாது.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியும்கூட நமக்கும். நம்முடைய பாப்பாக்களுக்கும்,

“பாதகம் செய்பவரைக் கண்டர்ல் - நீ
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!”

என்று சொல்லிக் கொடுத்தது என்னவோ உண்மை! ஆயிரம் பாரதி வந்துதான் சொல்லட்டுமே! நமக்கு எங்கே அந்தத் துணிவு வரப்போகிறது? பாண்டவர்களுக்கே கண்ணன் வந்ததால்தானே துணிவு பிறந்தது! நமக்குக் கண்ணன் வருவானா? அந்த விஷயத்திலும் - கடவுள் விஷயத்திலும் நமக்குப் போதிய நம்பிக்கை யில்லையே! நடப்பது நடக்கட்டும்!

நமக்கு எவ்வளவு தயக்கம்? இன்று நாம் அஞ்ச வேண்டியவைகளுக்கா அஞ்சுகிறோம்! அஞ்ச வேண்டாத வைகளுக்கே அஞ்சுகின்றோம்! இன்று மீண்டும் துரியோதனாதியர்கள்! சூரபதுமன்கள்! எங்குப் பார்த்தாலும் அவர்களே வெற்றி உலாப் போகின்றனர்!