பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

நமது நாடு இன்று போய்க் கொண்டிருக்கிற நிலையைப் பார்த்தால் விமோசனம் வருவதற்கே வாய்ப்பில்லை என்பதுபோலத் தெரிகிறது! கடவுளே! எனதருமை நாட்டை விழித்தெழச் செய்யக் கூடாதா? பாரதியின் தடத்தில் உய்த்துச் செலுத்தக் கூடாதா?

பாரதி, மானுடம் வளர, இந்த வையகம் பயனுற அன்பே ஆதாரம் என்று வலியுறுத்துகிறான். மனித குலம் இன்பத்தை அடைய வேண்டுமானால் அதற்குத் “தான்” ஆகிற கதவைத் திறந்து அன்பு வடிவமாக நிற்பதே உபாயம் அன்பு, காதல் என்னும் பெயர் பெறும்!

“ஓங்காரமாவது காதல் ஆணும் பெண்ணும் காதலித்து வாழ்வது கடவும் கொடை இயற்கை: இந்த உலகை காதல் படைக்கிறது. இந்த காதலைச் சராசரி மனிதன் வணிகமாக்குகிறான்! மிருக இச்சையுடன் கூடிக் கலைவோர் மிருகங்கள்!

காதலால் ஆன்மத் தொடர்பு கொண்டு உயிரும் உயிரும் கலப்பவர் மனிதரில் சிறந்தோர், மாமனிதர் இந்த அறிவே ஞானம்! அன்பைத் தவிர வேறு ஞானம் கிடையாது! ஏசுவின் பிறப்பு, அன்பின் பிறப்பு. விடுதலைக்கு அன்பு என்ற கதவு திறந்தாக வேண்டும்” - என்று பாரதி எழுதி அன்பின் அருமையை விளக்கியுள்ளான்,

பாரதி, அன்பினாலேயே பெரிய சமுதாய மாற்றங்களைச் செய்ய எண்ணுகிறான். அன்பு என்பது பேசிப் பழகுவதுடன் அமையாது . அமையக் கூடாது. விருந்துக்குப் பின் அன்புக்கு விடை கொடுப்பதை பாரதி விரும்பவில்லை.